×

காஞ்சிபுரம் நகராட்சி சார்பில் கண்துடைப்புக்காக நடக்கும் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை

காஞ்சிபுரம், மார்ச் 12: காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது, கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. தமிழகத்திலேயே முதலாவதாக ஓமன் நாட்டில் இருந்து காஞ்சிபுரம் வந்த இன்ஜினியருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், இன்ஜினியரின் குடும்பத்தில் உள்ள 8 பேரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்ததில், அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிந்தது. ஆனாலும், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் காஞ்சிபுரத்தில் தீவிரமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோயில்கள் நிறைந்த சுற்றுலா நகரமான காஞ்சிக்கு வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இவர்களை தீவிரமாகக் கண்காணித்து கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என ஆய்வு செய்யவேண்டும்.

ஆனால், காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரத் துறை மற்றும் நகராட்சி சார்பில் உரிய நடவடிக்கை எடுக்காமல், ஒருசில வெளியூர் மற்றும் வெளிமாநில பஸ்களில் கிருமி நாசினி தெளித்துவிட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டதாக கணக்கு காட்டுகிறார்கள் என சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.மேலும் அரசு மருத்துவமனை மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் செய்வதாக கூறும் அதிகாரிகள், அனைத்து தரப்பு மக்களுக்கும் புரியும் வகையில் பிரசாரம் செய்யாமல், ஆங்கில நாடகம் நடத்தி கலை நிகழ்ச்சி மூலம் கொரோனா விழிப்புணர்வு செய்கின்றனர். இதனால் அடித்தட்டு மக்கள் என்னவென்று தெரியாமலேயே கடந்து செல்கின்றனர்.கண்துடைப்புக்கு நடக்கும் கொரோனா வைரஸ் தொற்று விழிப்புணர்வு பிரசாரங்களால் பொதுமக்கள் மத்தியில் பீதி அதிகரிக்கிறதே தவிர, இதுவரை குறையாத நிலையே நீடிக்கிறது.

அரசு பள்ளி புறக்கணிப்பு
தமிழகத்திலேயே முதன்முறையாக காஞ்சிபுரம் இன்ஜினியருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ஆனால், அரசு சார்பில் நகராட்சி ஊழியர்கள், பஸ்களில் முதல்நாள் கிருமி நாசினி தெளித்ததோடு தொடர்ச்சியான நடவடிக்கை எடுக்கவில்லை.மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி முறையாக தெளிக்கவில்லை. மாணவர்கள் அதிகம் கூடும் இடங்களான பள்ளி, கல்லூரிகளில் கிருமி நாசினி தெளிக்கவில்லை. ஒருசில தனியார் பள்ளிகளில் மட்டும் தெளித்துவிட்டு, அரசுப் பள்ளிகளை புறக்கணிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா பாதிப்பு விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில்  காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் பழனி, காஞ்சிபுரம் பொறியாளர் குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என அவசர கதியில் அறிவிக்க வேண்டிய அவசியம் என்னவென்று மருத்துவ வட்டாரங்களில் இருந்து கேள்வி எழுப்புகின்றனர்.

Tags : municipality ,Kanchipuram ,
× RELATED திருப்பத்தூர் நகராட்சியில் பரபரப்பு...