×

ஓஎம்ஆர் புறவழிச்சாலை பணியால் மயானத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கும் காலவாக்கம் மக்கள்

திருப்போரூர், மார்ச் 12: ஓஎம்ஆர் புறவழி சாலை பணிகள் நடப்பதால், அருகில் உள்ள காலவாக்கம் கிராம மக்கள் மயானத்துக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.பழைய மாமல்லபுரம் சாலை எனப்படும் ராஜிவ்காந்தி சாலை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை 6 வழிப்பாதையாக உள்ளது. இதையடுத்து சிறுசேரியில் இருந்து பூஞ்சேரி வரை 4 வழிப்பாதையாக உள்ளது. இந்த சாலையில் படூர், கேளம்பாக்கம் பகுதியிலும், திருப்போரூர் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் புறவழிச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.படூர் - தையூர் இடையே ஒரு புறவழிச் சாலையும், திருப்போரூர் - ஆலத்தூர் இடையே ஒரு புறவழிச்சாலையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. படூர்  - தையூர் இடையே புறவழிச்சாலை 4.67 கி.மீ தூரத்துக்கு அமைகிறது. திருப்போரூர் - ஆலத்தூர் இடையே புறவழிச் சாலை 7.45 கி.மீ தூரத்திற்கு போடப்படுகிறது. 2 புறவழிச் சாலைகளுக்கும் சேர்த்து மொத்தம் ₹465 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து இந்த சாலை அமைக்க படூர், கழிப்பட்டூர், கேளம்பாக்கம், தையூர், காலவாக்கம், கண்ணகப்பட்டு, திருப்போரூர், தண்டலம், ஆலத்தூர், வெங்களேரி உள்பட 13 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் முதற்கட்டமாக படூர், கேளம்பாக்கம், தையூர் பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த கட்டமாக திருப்போரூர் - ஆலத்தூர் இடையே புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.

இச்சாலையின் கிழக்கு பக்கத்தில் காலவாக்கம் கிராமத்தின் மயானம் அமைந்துள்ளது. மேலும், கிராமத்தின் அதிகபட்ச விவசாய நிலங்களின் சாலையின் கிழக்குப் பக்கத்திலேயே அமைந்துள்ளது. சாலையின் மேற்கு பக்கத்தில் காலவாக்கம் கிராமம் அமைந்துள்ளது. கிராமத்துக்கும் மயானத்துக்கு இடையே சுமார் 200 அடி அகலத்தில் உயர் மட்டச்சாலை அமைக்கப்படுவதால், வரும் காலங்களில் காலவாக்கம் கிராமத்தில் யாரேனும் இறந்தால், அவர்களது சடலத்தை மயானத்துக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.மேலும், தினமும் நிலத்துக்கு செல்லும் விவசாயிகளும் தங்களின் ஆடு, மாடுகளை ஓட்டிச் செல்ல முடியாத நிலை ஏற்படும். சடலத்தை தூக்கிக் கொண்டு சுமார் 2 கி.மீ. தூரம் சுற்றிச் சென்று புறவழிச் சாலை ஓஎம்ஆர் சாலையுடன் இணையும் இடத்திற்கு சென்று மீண்டும் மயானத்திற்கு வர வேண்டிய நிலை ஏற்படும் என காலவாக்கம் கிராம மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.எனவே, காலவாக்கம் கிராமத்தில் இருந்து தங்களின் விவசாய நிலங்களுக்கும், மயானத்துக்கும் செல்லும் வகையில் சர்வீஸ் சாலை அல்லது சிறு பாலம் அமைத்து தர வேண்டுமென காலவாக்கம் கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : outposts ,OMR ,cemetery ,
× RELATED என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினால்...