×

தாம்பரம், பல்லாவரம் நகராட்சிகளில் சொத்துவரி செலுத்தாத வீடுகளுக்கு ஆணையர்கள் எச்சரிக்கை நோட்டீஸ்

பல்லாவரம், மார்ச் 12: பல்லாவரம் பகுதியில் சொத்து வரி செலுத்தாத வீடுகளுக்கு நகராட்சி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.
பல்லாவரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தமிழகத்தில் அரசுக்கு ஆண்டுதோறும் அதிக வருவாய் ஈட்டும் நகராட்சிகளில் பல்லாவரம் நகராட்சியும் ஒன்று. அதனால், நீண்ட நாள்களாக இப்பகுதி மக்கள் பல்லாவரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பல்லாவரம் நகராட்சி நிர்வாகம், கடந்த சில காலமாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக நகராட்சிக்கு உட்பட்ட பழைய பல்லாவரம், ஜமீன் ராயப்பேட்டை, நியூகாலனி உள்பட அனைத்து பகுதிகளிலும் சொத்து வரி செலுத்தாத பொதுமக்களின் வீடுகளுக்கு, நேரடியாக செல்லும் பணியாளர்கள் அங்கு, துண்டு பிரசுரம் ஒன்றை வழங்கி வருகின்றனர்.அதில், இதுவரை சொத்து வரி செலுத்தாத பொதுமக்கள் இந்த பிரசுரம் கண்ட 7 நாட்களுக்குள் பல்லாவரம் நகராட்சி கருவூலத்தில் இதுவரை செலுத்த வேண்டிய மற்றும் நிலுவையில் உள்ள சொத்து வரியை உடனடியாக எவ்வித பாக்கியும் இல்லாமல் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். தவறினால், தமிழ்நாடு நகராட்சிகளின் சட்டப்பிரிவு 344 மற்றும் ஷெட்யூல் மிக்ஷி பிரிவு 30 முதல் 34-ன் படி நீதிமன்றத்தில் குற்ற வழக்கு தாக்கல் செய்து, சொத்து வரி முழுவதும் வசூலிக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.

அந்த துண்டு பிரசுரத்தை வாங்கிய பொதுமக்கள் பதறியடித்து கொண்டு, பல்லாவரம் நகராட்சி அலுவலகம் சென்று, தாங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்த முயற்சித்தபோது, அங்குள்ள பணியாளர்கள், அர்ஜென்ட்டா அல்லது ஆர்டினரியா என கேட்டு குழப்பியுள்ளனர். அதற்கு அர்த்தம் தெரியாத மக்களிடம், அர்ஜென்ட் என்றால், செலுத்த வேண்டிய வரியுடன் கூடுதலாக ₹5 ஆயிரம் கொடுத்தால் உடனே ரசீது கிடைக்கும் என்றனர்.இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், எங்களுக்கு ஆர்டினரியே போதும் என்றனர். அதற்கு, நீங்கள் எவ்வளவு வரி கட்ட வேண்டும் என அதிகாரிகள் நேரடியாக உங்கள் வீட்டுக்கு வந்து, ஆய்வு செய்த பிறகே, நீங்கள் சொத்து வரி செலுத்த முடியும் என திருப்பி அனுப்புவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “பொதுமக்களிடம் இருந்து இவ்வளவு கறாராக வரி வசூல் செய்யும் நகராட்சி நிர்வாகம், ஏன் மக்களுக்கான அடிப்படை தேவைகளை செய்வதில் மட்டும் சுணக்கம் காட்டுகிறது. மக்களுக்கு ஒரு நியாயம், நகராட்சி நிர்வாகத்திற்கு ஒரு நியாயமா. தெருக்களில் குப்பை முறையாக சுத்தம் செய்யாததால், ஆங்காங்கே மலைபோல் குப்பை குவிந்து காணப்படுகிறது.
அதனை அங்கு சுற்றி திரியும் பன்றி, மாடுகள் மேய்வதால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் தெருக்களில் உள்ள சாலைகள் கடுமையாக சேதமடைந்து, குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. தற்போது கொரோனா போன்ற கொடிய நோய்கள் மக்களிடையே பரவி வரும் வேலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகரளை எடுக்காமர், மக்களை வஞ்சிப்பதில் மட்டுமே, நகராட்சி நிர்வாகம், தொடர்ந்து கவனத்தை செலுத்துவது கண்டிக்கத்தக்கது.

சொத்து வரியை வசூலிக்க வேண்டியது அவசியம். அதற்காக குற்றவாளிகளை நடத்துவது போல் நடத்துவதுடன், தொடர்ந்து அலைக்கழிப்பது எந்த வகையில் நியாயம். பொதுமக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் நகராட்சி நிர்வாகம், அதேபோல் ஊழல் செய்யும் நகராட்சி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க முன்வருமா என ஆதங்கத்துடன் கூறினர். எனவே, சொத்து வரி வசூலிக்க பல்லாவரம் நகராட்சி நிர்வாகம் எடுத்துள்ள இந்த குற்ற வழக்கு தாக்கல் என்னும் துண்டு பிரசுர நடவடிக்கை, அப்பகுதி மக்களிடையே நகராட்சி நிர்வாகத்தின் மீது ஆத்திரத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.தாம்பரம்: தாம்பரம் நகராட்சியில் சொத்து வரி பாக்கி தொகைகளை விரைவாக வசூல் செய்ய நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கருப்பையா ராஜா உத்தரவிட்டார். இதை தொடர்ந்து நகராட்சி வருவாய் அலுவலர் கருமாரியப்பன் தலைமையில், நகராட்சி வருவாய் பிரிவு ஊழியர்கள் அனைத்து வார்டுகளிலும் தீவிரமாக வரி வசூலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களில் வரி பாக்கி தொகை ₹58 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வரி பாக்கி வைத்திருப்பவர்களுக்கு சொத்தினை கையகப்படுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கருப்பையா ராஜா கூறுகையில், நகராட்சி பகுதிகளில் சொத்து வரி உட்பட நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி தொகைகளை வசூல் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை வரி தொகையை செலுத்த பலமுறை அறிவிப்பு நோட்டீஸ்கள் வழங்கியும், சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு தமிழ்நாடு நகராட்சிகள் சட்டம் 1930 ஷெட்யூல் 4 பிரிவு 30ன் படி சொத்தினை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.இதுதொடர்பாக சொத்தினை கையகப்படுத்த தாக்கீது, வரி செலுத்தாதவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதிலும் வரி செலுத்தாமல் இருப்பவர்கள் மீது காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை தொடர்வதுடன் நகராட்சி மூலம் சொத்து பறிமுதல் போன்ற சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளதால் இவற்றை தவிர்க்க வரி பாக்கி வைத்துள்ளவர்கள் உடனடியாக நிலுவை தொகைகளை செலுத்த வேண்டும் என்றார்.

Tags : Commissioners ,houses ,municipalities ,Pallavaram ,Tambaram ,
× RELATED இருக்கும்போது அருமை தெரியல... போன பிறகு...