×

பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால் நாணல் செடி புதரான கால்வாய்கள்

திருவள்ளூர், மார்ச் 12: திருவள்ளூர் நகரில் கழிவு நீர் மற்றும் மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித் துறையினர் அகற்றி தூர்வாராததால், ஏரிக்கு மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், வரும் பருவமழையில் திருவள்ளூர் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.திருவள்ளூர் நகரில் மழைநீர் வடிகால்வாய் முறையாக அமைக்கப்படவில்லை. தற்போது, திருவள்ளூர் நகரம் முழுவதும் அமைக்கப்பட்டு உள்ள மழைநீர் வடிகால்வாயில் சேகரமாகும் தண்ணீர், வெளியேற்றுவதற்கான வழியும் இல்லை. அவற்றை தேடுவதற்கான முயற்சியிலும், நகராட்சி மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் ஈடுபடுவதாக தெரியவில்லை.பெரியகுப்பம் ரயில் நிலையம் அருகில் துவங்கி, ஜெ.என்.சாலை, அரசு மருத்துவமனை பின்புறம் வழியாக, வி.எம்.நகர், 100 அடி சாலையைக் கடந்து, காக்களூர் ஏரியில் சேரும் பொதுப்பணி துறை கால்வாய் உள்ளது. இதேபோல், ஒன்றாவது வார்டான டோல்கேட்டில் துவங்கி, சி.வி.நாயுடு சாலை, நேதாஜி சாலை, குளக்கரை தெரு, பஸ் நிலையம் வழியாக, காக்களூர் ஏரிக்கு செல்லும் மற்றொரு பொதுப்பணி துறை கால்வாயும் உள்ளது.

இந்த இரண்டு கால்வாய்கள் மட்டுமே நகரின் கழிவுநீரை வெளியேற்றும் வடிகால். ஆனால், இந்த இரண்டு பிரதான கால்வாய்களும், ஆக்கிரமிப்பு, தூர் வாராதது, கழிவு பொருட்களால் அடைப்பு என பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றன. இதன் காரணமாக, இவ்விரண்டு கால்வாய்களும், தூர்ந்து கழிவுநீர் ஏரிக்கு வெளியேற வழியில்லாமல் தேங்கி உள்ளன.இந்நிலையில், இரு கால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார கடந்தாண்டு ரூ.30 லட்சம் செலவில் டெண்டர் விடப்பட்டது. ஆனால், டெண்டர் எடுத்தவர்களோ ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், தூர் வாராமல் வெறும் குப்பைகளை மட்டும் அள்ளி கரையில் போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.இதனால், கழிவுநீர் சீராக செல்ல வழியின்றி, கால்வாய்க்குள் நாணல் செடிகள் வளர்ந்து புதராக காட்சியளிக்கிறது. எனவே, நகராட்சி, பொதுப்பணி துறை மற்றும் வருவாய் துறையினர் இணைந்து, போர்க்கால அடிப்படையில், முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : department ,
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...