×

பிளஸ் 1 தேர்வு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு

திருத்தணி, மார்ச் 12: கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிளஸ் 1 கணிதத் தேர்வை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி நேற்று திடீர் ஆய்வு செய்தார்.  தமிழகம் முழுவதும் மார்ச் 2 முதல் பிளஸ் 2 தேர்வுகளும், மார்ச் 4 முதல் பிளஸ் 1 தேர்வுகளும் தொடங்கி  நடைபெற்று வருகின்றன. மொழிப் பாட  தேர்வுகள் முடிந்திருக்கின்றன. இதில் பிளஸ் 1 மாணவர்களுக்கு நேற்று கணிதம், விலங்கியல், வணிகவியல் தேர்வு நடந்தது, 18 ம் தேதி இயற்பியல், பொருளியல் தேர்வும், 23 ம் தேதி உயிரியில், தாவரவியல், வரலாறு தேர்வும், 26 ம் தேதி வேதியியல், கணக்கு பதிவியல் தேர்வு நடைபெற உள்ளன. இந்நிலையில் திருத்தணி காந்தி சாலையில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பொதட்டூர்பேட்டை ஆண்கள், பெண்கள் மேல் நிலை பள்ளி, பள்ளிப்பட்டு அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளி, ஆத்திமாஞ்சேரிப்பேட்டை, ஆர்.கே.பேட்டை, கே.ஜி.கண்டிகை அரசு மேல் நிலை பள்ளிகளில் பிளஸ் 1 கணிதத் தேர்வுகளை திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி ஆய்வு செய்தார்.

 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி கூறும்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் பொருத்தமட்டில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் நல்ல முறையில் நடந்து வருகின்றன. மொழிப் பாடங்கள் உள்ளிட்ட தேர்வுகள் முடிந்து பொறியியல், மருத்துவம், தொழில்கல்வி படிப்புகளுக்கான தேர்வுகள் தற்போது நடந்து வருகிறது. தேர்வு மையங்களில் காப்பி அடிப்பது, பிட் அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறக்கும் படை ஆசிரியர்கள் நியக்கப்பட்டுள்ளனர். இவை தவிர, வருவாய்த்துறையினரும் தேர்வு மையங்களில் திடீர் சோதனை மேற்கொள்கிறார்கள். கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் தேர்வுகளுக்கு கண்காணிப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழக மூத்த பேராசிரியர்கள் தலைமையில் சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் தேர்வுகளை கண்காணித்து வருகின்றனர். தேர்வுகள் குறித்து ஏற்கெனவே பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி தேர்வு மையங்களில் குடிநீர், கழிப்பிடம் சுத்தமாக வைத்தல், தேர்வு அறைகளை தவிர மற்ற ஏல்லா அறைகளும், பூட்டி வைத்தல், தேர்வு மையங்களில் யாரும் கைபேசிகளை பயன்படுத்தக்கூடாது, தொலைபேசி மட்டுமே பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு வழங்கி உள்ளோம் என்றார் அவர்.

Tags : District Primary Education Officer ,Government Schools ,
× RELATED அரசு பள்ளிகளை தொடர்ந்து தனியார்...