சங்கரன்கோவில், புளியங்குடியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

சங்கரன்கோவில், மார்ச் 12:  சங்கரன்கோவில், புளியங்குடி நகராட்சி பகுதியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது. தென்காசி மாவட்ட கலெக்டர் அறிவுரையின் பேரில் அனைத்து பொது கட்டிடங்கள், திரையரங்குகள் மற்றும் அனைத்து வர்த்தக நிறுவனங்களுக்கும் சங்கரன்கோவில் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) முகைதீன் அப்துல் காதர் மூலம்கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை சம்பந்தமான விழிப்புணர்வு அறிவிப்புகள் அனுப்பப்பட்டன. தற்போது நகராட்சி பகுதிக்குட்பட்ட பஸ் நிலையம், ரயில் நிலையம், போக்குவரத்து பணிமனை, தினசரி சந்தை மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மேலும், அனைத்து கட்டிட உரிமையாளர்களுக்கும் தங்கள் கட்டிடங்களை தினமும் குறைந்தது 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி கொண்டு துடைத்து சுகாதாரமாக பராமரிக்கும்படியும், கைகளை சோப்பு கரைசல் அல்லது கிருமிநாசினி கரைசல் கொண்டு தினமும் 10 முதல் 15 முறை சுத்தம் செய்திடவும், இருமும் போதும், தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கைகுட்டை கொண்டு மூடிக்கொள்ளவும், வெளிநாடு மற்றும் வெளிமாநில பயணங்களை தவிர்க்கவும், காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறவும் அறிவுறுத்தப்பட்டன. இந்த விழிப்புணர்வினை நகர்நல மருத்துவர் அனிதா மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் ராஜரத்தினம் ஆகியோர் ஏற்படுத்தினர்.

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் அனைத்தும் சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் கமிஷனர் (பொறுப்பு) முகைதீன் அப்துல் காதர் உத்தரவுப்படி சுகார அலுவலர் பாலசந்தர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பிச்சையா பாஸ்கர், சக்திவேல், மாதவராஜ்குமார், கருப்பசாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.இதேபோல் புளியங்குடி நகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சுரேஷ் தலைமை வகித்தார். சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், ஈஸ்வரன் ஆகியோர் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்தும், அது எவ்வாறு பரவுகிறது என்றும் எடுத்துரைத்தனர். இருமல், சளி, ஜலதோஷம் உள்ளவர்கள், பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினர். பஸ் நிலையத்தின் இருக்கைகள், அங்கு நின்றிருந்த பஸ்களின் உட்புற பகுதியில் நகராட்சி பணியாளர்கள் முக கவசம் அணிந்து சுத்தம் செய்தனர்.  இந்நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>