×
Saravana Stores

பழுதடைந்து கிடக்கும் களக்காடு சாஸ்தா கோயில் சாலை சீரமைக்கப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

களக்காடு, மார்ச் 12: களக்காடு அருகே பழுதடைந்து கிடக்கும் சாஸ்தா கோயிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அகலிகை சாபம் தீர்த்த அய்யன் சாஸ்தா கோயில் உள்ளது. இங்கு சாஸ்தா, அகலிகை, இந்திரன், ராமர், லட்சுமணர், விஸ்வாமித்திரர், தளவாய் மாடசுவாமி மற்றும் பரிவார தெய்வங்கள் எழுந்தருளி உள்ளனர். கவுதம முனிவரின் சாபத்தால் கல்லாக மாறிய அகலிகைக்கு ராமர் சாபவிமோசனம் கொடுத்த இடமாக கருதப்படும் அகலிகை சாபம் தீர்த்த அய்யன் சாஸ்தா கோயில் 800 ஆண்டுகள் பழமையானது ஆகும். பிரசித்திப் பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவில் தென்மாவட்டங்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த கோயிலுக்கு சிதம்பரபுரம்- எஸ்.என்.பள்ளிவாசல் செல்லும் சாலையில் இருந்து பிரிந்து தெற்கு நோக்கி செல்லும் 2 கிமீ தொலைவிற்கு சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகளை கடந்து விட்டது. இதனால் சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. ரோட்டில் ஆங்காங்கே குண்டும், குழிகள் ஏற்பட்டு உள்ளன. கற்களாகவும் சிதறி போக்குவரத்திற்கே பயனற்ற நிலையில் சிதிலமடைந்து காட்சி அளிக்கிறது.

பழுதடைந்த சாலையில் வாகனங்கள் செல்லும்போது அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள விவசாய தோட்டங்களுக்கும் இந்த சாலை வழியாகவே செல்ல வேண்டும். சாலை பழுதடைந்து கிடப்பதால் விவசாய பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகளும் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் மழைக்காலங்களில் ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் குளம்போல் தேங்குவதால் சாலை சகதிமயமாக மாறி விடுகிறது. களக்காடு யூனியனுக்குட்பட்ட இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். வருகிற ஏப்ரல் 6ம் தேதி பங்குனி உத்திர விழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. விழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார்கள், டூவீலர்கள், வேன்களில் குடும்பம், குடும்பமாக வருவார்கள். எனவே பழுதடைந்து கிடக்கும் சாலையை சீரமைக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Kalakkad Sastha Temple Road ,devotees ,
× RELATED 8 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்