×

தூத்துக்குடியில் கண்டுகொள்ளாத போலீசாரால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் விளையாட்டு மைதானம் சுவரில் துளையிட்டு புகுந்து அட்டகாசம்

தூத்துக்குடி, மார்ச் 12: தூத்துக்குடி மாவட்ட தருவைகுளம் விளையாட்டு மைதான சுற்றுச்சுவரில் மர்மநபர்கள் துளையிட்டு அதன் வழியாக இரவு நேரங்களில் சென்று சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானம் லயன்ஸ் டவுன் அருகே அமைந்துள்ளது. இங்கு மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள், சுதந்திர தினம், குடியரசு தினவிழா உள்ளிட்ட அரசு விழாக்கள், போலீசார் உடற்கூறு தேர்வு ஆகியன  நடக்கும் விதமாக சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த மைதானத்தை தினமும் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனுள்ளே பல உள்விளையாட்டு அரங்குகள், மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகம் உள்ளிட்டவையும் அமைந்துள்ளதால் விளையாட்டு அரங்கினை சுற்றிலும் சுமார் 10 அடி உயரத்திற்கு பாதுகாப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அங்குள்ள ஒரு தியேட்டர் எதிரே மைதான சுற்றுச்சுவரில் துளையிட்டு அதன் வழியாக மர்மநபர்கள் இரவில் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து மது அருந்துதல், கஞ்சா புகைத்தல், விளையாட்டு உபகரணங்களை திருடுதல், உள்விளையாட்டு அரங்க பொருட்களை உடைத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மர்மநபர்கள் குடித்து விட்டு மதுபாட்டில்களை வீசி செல்வதால் அதிகாலையில் நடை மற்றும் ஓட்டப்பயிற்சிக்கு வருபவர்களின் கால்களை பதம்பார்க்கிறது. சுற்றுச்சுவரில் ஏற்படுத்தும் துளைகளை அடைத்து சீரமைக்கப்பட்டாலும் மர்ம நபர்கள் சுவரில் அடுத்தடுத்து  பெரிய துளைகளை ஏற்படுத்தி உள்ளே நுழைந்து சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.சுவரில் மர்மநபர்களால் ஏற்படுத்தப்படும் துளைகளை அடைக்கும் பணியே தற்போது விளையாட்டு மைதான பொறுப்பாளர்கள், அலுவலர்களுக்கு முக்கிய பணியாக மாறிவிட்டது. இதனை இரவு நேரத்தில் ரோந்து செல்லும் போலீசாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. எனவே விளையாட்டு மைதான சுவர்களில் துளையிட்டு சமூக விரோத கும்பலை பிடித்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மைதான உபயோகிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Tags : playground ,activists ,Thoothukudi ,
× RELATED குளச்சலில் சமூக விரோதிகளின் கூடாரமான தீயணைப்பு நிலையம் திறக்கப்படுமா?