×

பணம் பறிப்பதற்காக தொழிலதிபரை காரில் கடத்திய கும்பலை பிடிக்க முயன்ற இன்ஸ்பெக்டருக்கு அடிஉதை: அண்ணாசாலையில் நள்ளிரவு பரபரப்பு சம்பவம்

சென்னை: சென்னை ராயப்பேட்டை செல்லப்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பைசுதீன்(48). தொழிலதிபரான இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொழில் தொடர்பாக மதுரை நாகூர் தோப்பு கிழக்கு வேலி ெதருவை சேர்ந்த ராஜா உசேன்(48) என்பவரிடம் 10 லட்சம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் சொன்னபடி பணத்தை பைசுதீன் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 1995ம் ஆண்டு சிந்தாதிரிப்ேபட்டையில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக, பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு ராஜா உசேன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் வந்துள்ளனர். பின்னர் ₹10 லட்சம் பணம் வாங்கிய தொழிலதிபர் பைசுதீனிடம் பணம் வாங்கியது தொடர்பாக பேச வேண்டும் என்று போன் செய்து அழைத்துள்ளனர். அதன்படி ேநற்று முன்தினம் இரவு 11 மணிக்கு அண்ணாசாலையில் உள்ள பிரபல ஓட்டல் முன்பு மதுரையை சேர்ந்த ராஜா உசேன் தொழிலதிபர் பைசுதீனை வரவழைத்து பேசியுள்ளார். அப்போது பணத்தை கொடுக்க சிறிது காலம் அவகாசம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், ராஜா உசேன் மகன் முகமது சைபுல்லா(27) தொழிலதிபர் பைசுதீனை தனது நண்பர்களுடன் சேர்ந்து கடுமையாக தாக்கி, காரில் ஏற்றி கடத்தி சென்றுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத தொழிலதிபர் காப்பாத்துங்கள் காப்பாத்துங்கள் என்று சத்தம் போட்டுள்ளார். இதைபார்த்த அங்கு இருந்த பொதுமக்கள் உடனே காரின் பதிவுஎண்ணுடன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.அதன்படி திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் தலைமையிலான போலீசார் கார் சென்ற திசையை நோக்கி வேகமாக சென்றனர். அப்போது ராயப்ேபட்டை மணிகூண்டு அருகே கடத்தப்பட்ட கார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் இருந்த 5 பேர் ஒருவரை அடித்து கொண்டிருந்தனர். இதை பார்த்த இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் தலைமையிலான போலீசார், அனைவரையும் பிடிக்க முயன்றனர். அப்போது, தொழிலதிபரை கடத்திய நபர்கள் இன்ஸ்பெக்டர் மோகன்தாசை சரமாரியாக அடித்து உதைத்தனர். உடன் வந்த போலீசார், இன்ஸ்பெக்டரை தாக்கியவர்களை பிடித்தனர்.

பின்னர் அனைவரையும் காவல் நியைத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தொழிலதிபர் பைசுதீன், தன்னை காரில் கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாகவும், அதேபோல் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் தன்னை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியதாக புகார் அளித்தனர். அதன்படி போலீசார் மதுரையை ேசர்ந்த ரவுடி ராஜா உசேன்(48), அவரது மகன் முகமது சைபுல்லா(27), திருச்சி வள்ளுவர் நகரை ேசர்ந்த ரகமதுல்லா(25), திருச்சி தென்னூர் காஜா தோப்பு பகுதியை சேர்ந்த ஆசிப் கான்(22), திருச்சி பாலக்கரை ஆழ்வார்தோப்பு தெருவை சேர்ந்த தவுபிக்(22) ஆகிய 5 பேர் மீது ஐபிசி 147,148,341,294(பி),323,363,506(ii) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.  கைது செய்யப்பட்ட ராஜா உசேன் மீது சிந்தாதிரிப்ேபட்டை காவல் நிலையத்தில் வெடி குண்டு தாக்குதல் நடத்திய வழக்கு மற்றும் மதுரை விளாத்திகுளம் காவல் நிலையத்தில் ராஜகோபால் என்பவரை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அண்ணாசாலையில் கடந்த 3ம் தேதி ரவுடிகள் கார் மீது வெடி குண்டு வீசிய தாக்குதல் நடத்திய பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் அண்ணாசாலையில் தொழிலதிபரை காரில் கடத்திய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Inspector ,gang ,businessman ,Anna Salai ,
× RELATED கள்ளச்சாராயம் விற்ற வாலிபர் கைது