×

அம்பத்தூர் - மணலி இடையே மாநகர, மினி பஸ்கள் இயக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

புழல்: அம்பத்தூர் - மணலி இடையே கொசப்பூர் மாத்தூர், மஞ்சம்பாக்கம் வழியாக மாநகர மற்றும் மினி பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். புழல் காந்தி பிரதான சாலையில் புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அம்மா குடிநீர், வேளாண்மை துறை அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மருத்துவமனைகள், வட்டார கல்வி அலுவலகம், மாநகராட்சி 22வது வார்டு அலுவலகம், குழந்தைகள் அங்கன்வாடி மையம், நூலகம், வருவாய்த்துறை அலுவலகம், மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையம், புகழ்பெற்ற இந்து மற்றும் ஜெயின் கோயில்கள், மாதவரம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த பகுதியில் மாநகர போக்குவரத்து பஸ் வசதி இல்லாததால், மாதாவரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பணிகள் குறித்து சான்றிதழ் பெற வந்து செல்லும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

குறிப்பாக புழல் மத்திய சிறைச்சாலை அருகிலிருந்து அதிகப்படியான பணம் கொடுத்து ஆட்டோக்களில் வந்து செல்கின்றனர். எனவே, அம்பத்தூரில் இருந்து ஒரகடம், புதூர், கள்ளிகுப்பம், சண்முகபுரம், சூரப்பட்டு, புழல் மத்திய சிறைச்சாலை, புழல் காந்தி பிரதான சாலை வழியாக வடபெரும்பாக்கம், செட்டிமேடு, கொசப்பூர், மாத்தூர், மஞ்சம்பாக்கம், மணலி வரை மாநகர பஸ் மற்றும் மினிபஸ் இயக்கவேண்டும். மேலும், காந்தி பிரதான சாலை, லட்சுமி அம்மன் கோவில் தெரு, சிவராஜ் தெரு சந்திக்கும் நான்குமுனை சந்திப்பில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு குறிப்பிட்ட நேரங்களில் பள்ளி மற்றும் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் மாணவர்களும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். ஒரு சில நேரங்களில் அடிதடி வாக்குவாதங்களும் ஏற்படுகிறது.  எனவே, இந்த பகுதியில் காலை மாலை நேரங்களில் புழல் போக்குவரத்து போலீசார் சார்பில் சுழற்சி முறையில் போலீசாரை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Ambattur - Manali ,
× RELATED அம்பத்தூர் - மணலி இடையே மாநகர, மினி...