×

இதுவரை வழங்கப்படாத தீபாவளி போனஸ் கிடைக்குமா? சுமை தூக்கும் தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

கீழ்வேளூர், மார்ச் 12: தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகம் சார்பில் நாகை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு அவை குறிப்பிட்ட சீசன் நேரத்தில் மட்டும் இயங்கும். இந்நிலையில் கீழ்வேளூரை அடுத்த குருக்கத்தியில் ஆண்டு தோறும் இயக்கப்படும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 14 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றுவார்கள். இந்த தொழிலாளர்களுக்கு தீபாவளிக்கு ரூ.3,000 வீதம் வழங்கப்படும் தீபாவளி போனஸ் இந்த ஆண்டு வழங்கப்பட வில்லை.
தங்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க கேட்ட போது குருக்கத்தி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த ஆண்டு தினசரி செலவுக்கு வழங்கப்படும் தொகை கணக்கு காட்டப்படாமல் உள்ளது என்றும் இதில் பட்டியல் எழுத்தர் ரூ. 23 ஆயிரம் கட்ட வேண்டும். அப்படி அந்த தொகை கட்டப்பட்டால் தான் தங்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தினசரி செலவு தொகைக்கும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும சம்பந்தம் இல்லாத நிலையில் இந்த ஆண்டு குருக்கத்திக்கு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற நோக்கோடு ரூ. 23 ஆயிரத்தை சுமை தூக்குவோர் சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வெளியில் வட்டிக்கு கடன் வாங்கி அந்த தொகையை நுகர் பொருள் வாணிபக் கழகத்திடம் செலுத்தியுள்ளனர். அதன் பின்னர் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய தீபாவளி போனஸ் இன்னும் வழங்காமல் நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகள் சுமை தூக்கும் தொழிலாளர்களை இழுத்தடித்து வருகின்றனர். உடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தீபாவளி போனஸ் உடன் வழங்க வேண்டும் என்று சுமை தூக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Diwali ,load lifting workers ,
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...