×

ஆசியாவில் முதல் முறையாக 17 வயது சிறுவனுக்கு சிறு குடல் மாற்று அறுவை சிகிச்சை: அப்போேலா மருத்துவர்கள் சாதனை

ெசன்னை: ஆசியாவில் முதல் முறையாக 17 வயது இளைஞருக்கு சிறு குடல் மாற்று அறுவை சிகிச்சை செய்து அப்போலோ மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், சிவகுருபுரு கிராமத்தை சேர்ந்தவர் சின்னி கிருஷ்ணா. இவர், தசை விரயம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் தீவிர சுருக்க குடல் நோயால் அவதிப்பட்டு வந்தார். இது தொடர்பாக ஆந்திராவில் சிகிச்சை மேற்கொண்ட போது அவரது சிறு குடல் பாதிக்கப்பட்டது. மேலும் அதை அகற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இதன்பிறகு மேல் சிகிச்சைக்காக  சென்னை அப்போலோ மருத்துவமனையில், சின்னி கிருஷ்ணா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல் எடையை அதிகரிக்கும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பின், இறந்த நபரிடமிருந்து தானமாக பெறப்பட்ட, சிறு குடல், ‘அப்டாமினல்’ எனப்படும் வயிற்று சுவர் ஆகியவற்றை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வாயிலாக சின்னி கிருஷ்ணாவுக்கு பொருத்தினர்.

இந்த அறுவை சிகிச்சையை, அப்பல்லோ மருத்துவமனையில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அனில் வைத்யா தலைமையில், டாக்டர் மோகன் குமார், வெங்கடேஷ் ராஜ்குமார், நிவாஷ் சந்திரசேகரன், ஷியாமளா, செந்தில், கணபதி கிருஷ்ணன், தினேஷ் பாபு ஆகியோர் அடங்கிய குழுவினர் மேற்கொண்டனர்.  இதேபோல், இறந்த அதே நபரிடமிருந்து தானமாக பெறப்பட்ட சிறுநீரகம், கிரந்தி  என்ற பெண்ணுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இந்த பெண்ணிற்கு, சிறுநீரகம் பொருத்துவதற்கு முன், ஹைப்போதெர்மிக் ஆக்சிஜனேற்றப்பட்ட நவீன இயந்திரத்தில், செறிவூட்டப்பட்ட ஆக்சிஜன் சுழற்சியுடன், 11 மணி நேரம் வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம், செறிவூட்டப்பட்ட ஆக்சிஜனை தொடர்ச்சியாக வழங்குவதால், மனித உடலில் இயங்கி கொண்டிருப்பது போன்ற நிலையிலேயே சிறுநீரகம் பாதுகாக்கப்படுகிறது என, டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, அப்பல்லோ மருத்துவமனையின் மேலாண்மை இயக்குனர் சுனிதா ரெட்டி கூறியதாவது: அப்பல்லோ உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிறுவனத்தில் 90 சதவீதத்துக்கும் அதிகமான சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகின்றன. எங்கள் உறுப்பு மாற்று சிகிச்சை மையம் நம்பிக்கையின் அடையாளமாக திகழ்கிறது. சிறந்த சுகாதார சேவையை வழங்க நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறோம். உறுப்புப் பாதுகாப்பதற்கானவ சிறந்த  கருவியை நாங்கள் இப்போது இந்தியாவுக்குக் கொண்டு வந்துள்ளோம். இது சிறுநீரகப் பாதுகாப்பு மற்றும் கல்லீரல் பாதுகாப்பிற்கான மிகவும் மேம்பட்ட இயந்திரமாகும் இவ்வாறு அவர் கூறினார்.

Tags : time ,Asia ,
× RELATED வரலாற்றில் முதன்முறையாக ரூ.50,000ஐ தொட்ட...