×

பல்லாவரம் பகுதியில் சொத்துவரி செலுத்தாத வீடுகளுக்கு நகராட்சி எச்சரிக்கை நோட்டீஸ்: ˜ அடிப்படை வசதிகள் எங்கே? ˜ பொதுமக்கள் சரமாரி கேள்வி

பல்லாவரம்: பல்லாவரம் பகுதியில் சொத்து வரி செலுத்தாத வீடுகளுக்கு நகராட்சி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் செய்துதரப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். பல்லாவரம் நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. இங்கு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் அரசுக்கு ஆண்டுதோறும் அதிக வருவாய் ஈட்டித் தரும் நகராட்சிகளில் பல்லாவரம் நகராட்சியும் ஒன்று. அதனால் தான், நீண்ட நாள்களாக இப்பகுதி பொதுமக்கள் பல்லாவரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பல்லாவரம் நகராட்சி நிர்வாகமானது, சமீப காலமாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட பழைய பல்லாவரம், ஜமீன் இராயப்பேட்டை, நியூகாலனி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சொத்து வரி செலுத்தாத பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாக செல்லும் பணியாளர்கள் அங்கு, துண்டு பிரசுரம் ஒன்றை வழங்கி வருகின்றனர்.

அதில், இதுவரை சொத்து வரி செலுத்தாத பொதுமக்கள் இந்த பிரசுரம் கண்ட ஏழு நாட்களுக்குள் பல்லாவரம் நகராட்சி கருவூலத்தில் தாங்கள் இதுநாள் வரை செலுத்த வேண்டிய மற்றும் நிலுவை வைத்துள்ள சொத்து வரியினை உடனடியாக எவ்வித பாக்கியும் இன்றி செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். தவறினால், தமிழ்நாடு நகராட்சிகளின் சட்டப்பிரிவு 344 மற்றும் ஷெட்யூல் மிக்ஷி பிரிவு 30 முதல் 34-ன் படி நீதிமன்றத்தில் குற்ற வழக்கு தாக்கல் செய்து, சொத்து வரி முழுவதும் வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கை வாசகம் இடம் பெற்றிருந்தது.  அந்த துண்டு பிரசுரத்தை வாங்கிய பொதுமக்கள் பதறியடித்து கொண்டு, பல்லாவரம் நகராட்சி அலுவலகம் சென்று, தாங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்த முயற்சி செய்தபோது, அங்குள்ள பணியாளர்கள், அர்ஜென்ட்டா அல்லது ஆர்டினரியா என்று கேட்டு குழப்பியுள்ளனர். இது புரியாமல் விழி பிதுங்கி நிற்கும் பொதுமக்களிடம், அர்ஜென்ட் என்றால், தாங்கள் செலுத்த வேண்டிய வரியுடன் கூடுதலாக ஐந்தாயிரம் பணம் கொடுத்தால் உடனடியாக ரசீது வழங்கப்படும் என்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், எங்களுக்கு ஆர்டினரியே போதும் என்றால், நீங்கள் எவ்வளவு வரி கட்ட வேண்டும் என்று அதிகாரிகள் நேரடியாக உங்கள் வீட்டிற்கு வந்து, ஆய்வு செய்த பிறகே, நீங்கள் சொத்து வரி செலுத்த முடியும் என்று திருப்பி அனுப்புவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.  இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “பொதுமக்களிடம் இருந்து இவ்வளவு கறாராக வரி வசூல் செய்யும் நகராட்சி நிர்வாகம், ஏன் மக்களுக்கான அடிப்படை தேவைகளை செய்து தருவதில் மட்டும் தொடர்ந்து சுணக்கம் காட்டி வருகிறது. மக்களுக்கு ஒரு நியாயம், நகராட்சி நிர்வாகத்திற்கு ஒரு நியாயமா. தெருக்களில் குப்பைகளை முறையாக சுத்தம் செய்யாததால், ஆங்காங்கே குப்பைகள் குவிந்து காணப்படுகிறது.

அவற்றை அங்கு சுற்றி திரியும் பன்றி, மாடு போன்ற விலங்குகள் மேய்ந்து வருவதால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் தெருக்களில் உள்ள சாலைகள் கடுமையாக சேதமடைந்து, குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. தற்போது கொரோனா போன்ற கொடிய நோய்கள் மக்களிடையே பரவி வரும் வேலையில், அது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் நகராட்சி நிர்வாகம் எடுக்காமல் மக்களை வஞ்சிப்பதில் மட்டுமே தொடர்ந்து தனது கவனத்தை செலுத்தி வருவது கண்டிக்கத்தக்கது.
சொத்து வரியை கறாராக வசூலிக்க வேண்டியது தான். அதில் தவறில்லை. அதற்காக குற்றவாளிகளை நடத்துவது போல் பொதுமக்களை நடத்துவதுடன், தொடர்ந்து அலைக்கழிப்பது எந்த வகையில் நியாயம்.

பொதுமக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முன் வரும் நகராட்சி நிர்வாகம், அதேபோல் ஊழல் செய்யும் நகராட்சி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா” என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். சொத்து வரி வசூலிக்க பல்லாவரம் நகராட்சி நிர்வாகம் எடுத்துள்ள இந்த குற்ற வழக்கு தாக்கல் என்னும் துண்டு பிரசுர நடவடிக்கை, அப்பகுதி மக்களிடையே நகராட்சி நிர்வாகத்தின் மீது ஆத்திரத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : houses ,area ,Pallavaram ,
× RELATED பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை...