×

மானிய கோரிக்கையின்போது புதிய கல்விக்கொள்கையில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

திருவாரூர், மார்ச் 12: தமிழக சட்டசபையில் நடைபெறும் மானிய கோரிக்கையில் புதிய கல்விக்கொள்கையில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் தமிழகத்திற்கு என்று சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதிய கல்விக் கொள்கையில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உட்பட பல்வேறு புதிய அறிவிப்புகள் உள்ள நிலையில் தற்காலிகமாக நடப்பாண்டில் இந்த 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது ரத்து செய்யப்பட்டாலும் வரும் காலங்களில் இதனை மீண்டும் அமல்படுத்துவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் தமிழக அரசு உடனடியாக இந்த புதிய கல்விக் கொள்கையில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

இதுமட்டுமின்றி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் அதற்காக செலவிடப்படும் தொகையை தவிர்த்து அரசு பள்ளிகளை மேம்படுத்திட அந்த தொகையை பயன்படுத்திட வேண்டும். மேலும் ஜாக்டோ- ஜியோ போராட்டத்தின்போது ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை மற்றும் வழக்குப்பதிவு காரணமாக பதவி உயர்வு, பணியிட மாறுதல், ஊதிய உயர்வு போன்றவை பாதிக்கப்பட்டு வருவதால் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் வழக்கு பதிவினை ரத்து செய்ய வேண்டும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கையினை நிறைவேற்றிட வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

Tags :
× RELATED முத்துப்பேட்டை அருகே தென்னங்கன்றுகளுக்கு தீ வைத்தவருக்கு கத்திக்குத்து