×

வலங்கைமான் தாலுகா பகுதிகளில் பருத்தி சாகுபடிக்கு முதல்கட்ட பணி துவக்கம்

வலங்கைமான், மார்ச் 12: வலங்கைமான் தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதிகளில் நடப்பு பருவத்தில் சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தென் மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை கடந்த சில ஆண்டுகளாக குறைந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் மூன்றுபோக நெல் சாகுபடி முடிவுக்கு வந்து ஒருபோக சம்பா சாகுபடியே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சம்பா சாகுபடியே குறித்த நேரத்தில் துவங்க முடியாத நிலை கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டதால் சம்பா அறுவடை பணிகள் கால தாமதம் ஆனது. இதன் காரணமாக வழக்கமாக நெல் அறுவடைக்கு பின் மேற்கொள்ளப்படும் பயறு, உளுந்து சாகுபடி மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது. அதனையடுத்து நெல் அறுவடைக்கு பின் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டினர். இருப்பினும் பருத்தி சாகுபடிக்கு ஆட்கள் பற்றாக்குறை, பூச்சிதாக்குதல் மற்றும் பருத்திக்கு எரிய விலை கிடைக்காதது போன்ற காரணத்தால் பருத்தி சாகுபடி படிப்படியாக குறைய ஆரம்பித்தது.

பின்னர் பருத்தி சாகுபடியில் இயந்திரத்தின் வருகையால் ஆட்கள் பற்றாக்குறை என்ற நிலை மாறியதால் மீண்டும் பருத்தி சாகுபடி அதிகரித்தது.இந்நிலையில் மார்ச் மாதத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் நூறுஅடிக்கு அதிகமாக உள்ள நிலையில் வருகிற ஜூன் மாதம் டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அதன் மூலம் கடந்த சில ஆண்டுகளுக்கு பின் குறுவை சாகுபடி மேற்கொள்வதற்கான சூழ்நிலை உள்ளது. அதன் காரணமாக பருத்தி சாகுபடி குறைய வாய்ப்புள்ளது. தற்போது சம்பா சாகுபடி மேற்கொள்ளப்படும் வயல்களில் மட்டுமே பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வலங்கைமான் தாலுகாவில் லாயம், ஆதிச்சமங்கலம், சித்தன்வாழுர், தொழுவூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடப்பு பருவத்தில் சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் சுமார் ஆயிரத்து நூறு ஏக்கரில் பருத்தி சாகுபடி முடிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள பகுதிகளில் பருத்தி விதை போடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

Tags : Valangaiman Taluk ,
× RELATED நீர் நிலைகளில் போதிய தண்ணீர் இல்லை...