×

திட்ட விளக்க கூட்டத்தில் வலியுறுத்தல் மாங்குடி கிராமத்தில் மாதிரி கிராம செயல் விளக்க பயிற்சி

முத்துப்பேட்டை, மார்ச் 12: முத்துப்பேட்டை அடுத்த மாங்குடி கிராமத்தில் பொதுப்பணித்துறை நீர்வளத்திட்டத்தின் சார்பில் “மாதிரி கிராம” செயல் விளக்க பயிற்சி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் பக்கிரிசாமி தலைமையில் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி பொதுப்பணித்துறை வெண்ணாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் கண்ணப்பன் பயிற்சியை தொடங்கி வைத்த பேசும்போது, பொதுப்பணித்துறை சார்பில் மாங்குடி கிராமத்தில் ஆறு வாய்க்கால் தூர் வாரப்பட்டுள்ளது, மீதமுள்ள வாய்க்கால் இந்த ஆண்டு தூர்வாரப்படவுள்ளது என்றார். பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் பேசும் போது, வயல்களில் கிடக்கும் வைக்கோல்களையும், உளுந்து சக்கைகளை கொண்டு மக்கிய உரமாக மாற்றி நிலத்தை வளமுள்ளதாக மாற்றமுடியும், வைக்கோலை தீயிட்டு எரிக்க வேண்டாம் என்றும், இயற்கை உரங்களை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்றார்.

தோட்டக்கலை உதவி அலுவலர் சுப்பிரமணியன் கூறும்போது, கோடையில் பூசணி, வெண்டை, வெள்ளரி காய்கறிகளை பயிரிட்டு அதிகலாபம் பெறலாம். முதலமைச்சரின் ஊரக காய்கறி உற்பத்தி திட்டத்தின் சார்பில் இலவச காய்கறி விதைகளை பெற்று பயிரிடலாம் என்றார். முத்துப்பேட்டை உதவி வேளாண் அலுவலர் கதிர் கூறும்போது, கோடைக்காலத்தில் உளுந்து, பருத்தி, எள் போன்றவற்றை சாகுபடி செய்து பயன்பெறலாம் என்றார். அதனை தொடர்ந்து பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக காய்கறி விதைகள் வழங்கப்பட்டது. உதவி பொறியாளர் சோலைராஜன் நன்றி கூறினார்.

Tags : project briefing ,
× RELATED நீடாமங்கலம், கோட்டூர் அரசு ஐடிஐயில் சேர விண்ணப்பம் வரவேற்பு