தனியார் கட்டிடங்களில் இடநெருக்கடியில் அங்கன்வாடிகள்

கோவை, மார்ச்.12:  கோவை மாவட்டத்தில் 177 அங்கன்வாடி மையங்கள் தனியார் கட்டடங்களில் வாடகைக்கு இட வசதியில்லாமல் நெருக்கடியுடன் செயல்பட்டு வருவதால், ஊழியர்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அங்கன்வாடிகளுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டி அதில் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டத்தில் 1,697 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. சமூக நலத் துறையின், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.  இங்கு 2 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இங்கு அடிப்படைக் கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்டவை குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் குழந்தைகளை சுகாதாரமாக ஆரோக்கியமாக வளர்ப்பது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகின்றது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை குழந்தைகள் அங்கன்வாடிகளில் பராமரிக்கப்படுகின்றனர். பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்லும் பெரும்பாலான குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் அங்கன்வாடி மையங்களை நம்பியே உள்ளனர். வேலைக்கு சென்றுவிட்டு பின்னர் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து செல்வதால் பெற்றோர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அங்கன்வாடி மையங்கள் உள்ளன.  இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள 1,697 அங்கன்வாடி மையங்களில் 177 அங்கான்வாடி மையங்கள் தனியார் கட்டிடத்தில் வாடகைக்கு இயங்கி வருகின்றன. இக்கட்டிடங்கள் போதிய இடவசதியில்லாமல் மிக நெருக்கடியான நிலையில் காணப்படுவதால் குழந்தைகள் விளையாடுவதற்கு, உறங்குவதற்குமே இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் சொந்த கட்டடம் அமைக்கக்கோரி பல ஆண்டுகளாக துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டும் அரசு கண்டுக்கொள்ளவில்லை என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 14 மற்றும் மாநகராட்சியில் 4 என சேர்த்து 18 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு, இதன் கீழ் 1,697 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் படித்து வருகின்றனர். தனியார் கட்டிடங்களில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டடங்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை வாடகை செலுத்தப்படுகிறது. ஆனால் போதிய இட வசதியில்லாமல் ஊழியர்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே போல் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் நூற்றுக்கும் அதிகமான அங்கான்வாடி மையங்கள் பராமரிப்பில்லாத பழைய கட்டிடங்கள் ஆகும். இதனால் அக்கட்டிடங்கள் பாதுகாப்பற்ற சூழலில் செயல்பட்டு வருகின்றன. இதனால் குழந்தைகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. புதிய கட்டிடம் அமைக்கவும், பாழடைந்த கட்டிடங்களை சீரமைக்கவும் நிதி கேட்டு பலமுறை அரசுக்கு கருத்துரு அனுப்பியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தனியார் பங்களிப்பு நிதியை திரட்டி பராமரிப்பை மேற்கொள்ள வலியுறுத்தப்படுகிறது,’’ என்றார்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘மாவட்ட நிர்வாகம் உடனடியாக தனியார் கட்டிடங்களில் இயங்கும் அங்கன்வாடி மையங்களை சொந்த கட்டிடங்களுக்கு மாற்ற வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: