×

கோவையில் பதட்ட சூழல் மாநகரில் 24 மணி நேரமும் தீவிர ரோந்து

கோவை, மார்ச் 12:  கோவை நகரில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா விவகாரத்தை தொடர்ந்து இரு தரப்பினர் இணக்கமில்லாத சூழல் அதிகரித்து வருகிறது. இந்து முன்னணி நிர்வாகி ஆனந்த் தாக்கப்பட்டார். இதை தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ நிர்வாகி இக்பால் மீது தாக்கல் நடத்தப்பட்டது. ஆட்டோக்கள் மீது கல் வீசுவது அடிக்கடி நடக்கிறது. பதட்ட சூழல் அதிகமானதை தொடர்ந்து மாநகரில் உளவுப்பிரிவு, சிறப்பு புலனாய்வு பிரிவு, நுண்ணறிவுப்பிரிவு மூலமாக பல்வேறு அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள், செயல்பாடுகளில் தீவிரம் காட்டுபவர்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சமீபத்தில் நகர், புறநகரில் 37 பேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் பாதுகாப்பு கேட்டுள்ளனர். இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ கடந்த இரு மாதத்தில் குடியுரிமை விவகாரத்தில் 120க்கும் மேற்பட்ட போராட்டம், ஆர்ப்பாட்டம், கூட்டம், பேரணி போன்றவை நடந்துள்ளது. பெரும்பாலானா போலீசார் இந்த விவகாரத்தில் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். ஊர்வலம், பேரணி போன்றவற்றில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இரு தரப்பினரையும் சமாதானம் செய்து நிலையை கட்டுக்குள் கொண்டு வர தேவையான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு அமைப்புகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கிறோம். இரவு நேர ரோந்து பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. 80க்கும் மேற்பட்ட சென்சிடிவ் ஏரியாக்களில் போலீசார் 24 மணி நேரம் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர், ’’ என்றார்.

Tags : Goa ,
× RELATED தேர்தல் விதிமுறையை மீறி அண்ணாமலை...