×

கோபி அருகே குப்பைக்கிடங்கில் தீ விபத்து

கோபி, மார்ச் 12: கோபி அருகே செங்காட்டில் குப்பை கிடங்கிற்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட மரங்கள் தீயில் கருகியது. குப்பையில் கண்ணாடி பாட்டில் வெடித்து சிதறியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது
கோபி அருகே உள்ள லக்கம்பட்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் தினமும் சேகரிக்கப்படும் குப்பை, செங்காடு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த குப்பை கிடங்கில் 50க்கும் மேற்பட்ட யூகோலிப்டஸ், புளிய மரம், வேப்பமரங்கள் உள்ளது.நேற்று முன்தினம் இரவு இந்த குப்பை கிடங்கிற்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். குப்பையில் இருந்த காகிதம், பிளாஸ்டிக் பொருட்களில் தீப்பிடிக்கவே தீ கொழுந்து விட்டு எரிந்தது.  கிடங்கில் இருந்த மரங்களிலும் தீப்பற்றியது. குப்பை கிடங்கில் இருந்த கண்ணாடி பாட்டில்கள் தீயில் வெடித்து சிதறியதால் கோபி - பங்களாபுதூர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கோபி தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது கண்ணாடி பாட்டில் வெடித்து சிதறவே, தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட மரங்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. குப்பை கிடங்கிற்கு தீ வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : garbage dump ,Kobe ,
× RELATED ஈரோடு மாவட்டம் கோபி அருகே கட்டிடத்...