×

குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஈரோடு, மார்ச் 12: ஈரோடு மாநகராட்சி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின்கீழ் குழந்தை தொழிலாளர்களை அகற்றுதல் குறித்த உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் கதிரவன் துவக்கி வைத்து பேசியதாவது:குழந்தை தொழிலாளர் முறை சட்டம் 1986ன்படி வீடுகள், உபசரிப்பு பணிகளாக கருதப்படும் டீக்கடை, ஓட்டல், சாலையோர உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் ஆகியவற்றில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை பணியில் அமர்த்துவதால் அவர்களின் கல்வி தடைபட்டு எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. மேலும், அவர்கள் உடல் ரீதியாக கொடுமைப்படுத்தப்படுவதும், பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதும் நேரிடுகிறது. இந்த கொடிய செயல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த தொழில்களை அபாயகரமான தொழில்கள் பட்டியலில் சேர்த்து மத்திய அரசு புதிய தடை சட்டத்தை இயற்றியுள்ளது. அதன்படி, 14 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமியர்களை வேலைக்கு அமர்த்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். குழந்தை தொழிலாளர் சட்டமானது குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் தொழிலாளர் சட்டமாக திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, 1986ம் ஆண்டு குழந்தை தொழிலாளர் சட்டம் தற்போது குழந்தை தொழிலாளர் மற்றும் வளர் இளம் பருவத்தினர் தொழிலாளர் சட்டமாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும், 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதைத்தொடர்ந்து, குழந்தை தொழிலாளர்களை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின்கீழ் படிக்கும் மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

Tags :
× RELATED குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி