×

தாளவாடி மலைப்பகுதியில் ஆண்கள் பங்கேற்கும் குண்டம் திருவிழா

சத்தியமங்கலம், மார்ச் 12: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கொங்கள்ளி மல்லிகார்ஜூனசாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றதுதாளவாடியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொங்கள்ளி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் மல்லிகார்ஜூனசாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 9ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் விழா துவங்கியது. நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாமியை அழைத்தபடி மேளதாளங்கள் முழங்க பாரம்பரிய நடனமாடியபடி கோயிலை சுற்றியபடி அருகே குளத்திற்கு சென்றனர். குளத்தில் பூஜைகள் செய்தபின் கோயில் முன்பு தயார் செய்யப்பட்ட  குண்டத்தில் சிறப்பு பூஜை செய்து பூசாரி சுவாமி  பக்திப்பரவசத்துடன் இறங்கி நடந்து வந்தார். பின்னர், பக்தர்கள் அனைவரும் குண்டத்தை வணங்கி அதில் உள்ள சாம்பலை விபூதியாக எடுத்து பூசினர்.

இக்கோயிலில் பூசாரி ஒருவர் மட்டுமே குண்டம் இறங்குவது வழக்கம். பெண்கள் இக்கோயிலுக்கு வர அனுமதியில்லை. ஆண்களே பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். தமிழக கர்நாடக மாநில எல்லையில் கோயில் உள்ளதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர், மைசூர், மாண்டியா, குண்டல்பேட்டை பகுதிகளிலிருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை 18 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : festival ,Dalavadi Mountain ,
× RELATED செப்டம்பரில் வெனிஸ் திரைப்பட விழா