×

ஈரோடு மாவட்டத்தில் வனத்தீயை தடுக்க தன்னார்வலர் குழு

ஈரோடு, மார்ச் 12:  ஈரோடு மாவட்டத்தில் வனத்தீயை தடுக்க தன்னார்வலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:தமிழகத்தில் நடப்பாண்டு வனத்தீ ஏற்படாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவும், தன்னார்வலர்கள் குழு அமைக்கவும் தீயணைப்பு துறை இயக்குநர் டிஜிபி சைலேந்திரபிரபு உத்தரவிட்டார். அதன்பேரில், மாவட்டத்தில் பல்வேறு வன பகுதியில் தன்னார்வலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், சத்தியமங்கலம், ஆசனூர், பண்ணாரி போன்ற பகுதியில் தன்னார்வலர்களுக்கு வனத்தீ தடுப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த மாதம் டி.என்.பாளையம் வனப்பகுதியில் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. அடுத்தது அந்தியூர் வனப்பகுதி அல்லது கோபி பகுதியில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி மேற்கொள்ளப்படும்.மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் வனத்தீயை தடுக்கும் வகையில் தீ கோடு போடப்பட்டுள்ளது. தீ கோடு என்றால் வனப்பகுதியின் நடுவே குழிகள் தோண்டப்படும். இந்த குழிகள் மூலம் தீ பரவினாலும் இந்த குழிகளினால் தடுக்கப்படும். வனத்தீ பொதுவாக மூங்கில் மரங்கள் ஒன்றுடன் ஒன்று உரசுவதனாலும், மர்மநபர்கள் தீயை அணைக்காமல் சிகரெட் போன்றவற்றை அப்படியே வீசி செல்வதனாலும் ஏற்படுகிறது. நடப்பாண்டில் இதுவரை மாவட்டத்தில் எந்த ஒரு வனத்தீயும் ஏற்படவில்லை. வனத்தீ ஏற்படாமல் இருக்க வனத்துறையினருடன், தீயணைப்பு துறையினரும் இணைந்து அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்துள்ளோம். அதேபோல், மாவட்ட வனப்பகுதிக்குள் டிரெக்கிங் செல்வதற்கு யாருக்கும் அனுமதி இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Volunteer Committee to Prevent Wildlife ,Erode District ,
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!