×

கல்வியமைச்சர் அறிவிப்பு செயல்பாட்டுக்கு வரவில்லை பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்களா?

விழுப்புரம், மார்ச் 12: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012ம் ஆண்டு உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் உள்ளிட்ட பாடங்களில் ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கினார். வருகிற ஜூன் மாதம் 10வது கல்வியாண்டு துவங்கவுள்ள நிலையில் இவர்களுக்கு தற்போதுவரை ரூ.7 ஆயிரத்து 700 மட்டுமே தொகுப்பூதியமாக கிடைக்கிறது. இவர்களில் சிலர் மரணம், பணிஓய்வு, ராஜினாமா என கிட்டத்தட்ட 5ஆயிரம் காலியிடங்கள் ஏற்பட்டு 12 ஆயிரத்துக்கும் குறைவான பகுதிநேர ஆசிரியர்களே தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.2017ம் ஆண்டு நடந்த சட்டசபை கூட்டத்தில், கல்விஅமைச்சர் செங்கோட்டையன் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்து வருவதாகவும், இதுதொடர்பாக 3 மாதத்துக்குள் கமிட்டி அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் அமைச்சர் அறிவித்து 2 ஆண்டுகளை கடந்தும், இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.அதே நேரத்தில், பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்கள் முழு நேர வேலையுடன் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பகுதிநேர கிராம முன்சீப், கர்ணம், மணியக்காரர், கிராம்சை, தலையாரி, வெட்டியான் போன்றோர் முழுநேரவேலையுடன் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். பகுதிநேரமாக செயல்பட்டு வந்த இப்பணிகளை காலசூழ்நிலைக்கு ஏற்றவாறு, மக்கள் சேவைக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் பணிநிரந்தரம் செய்துள்ளனர். இதேபோல் கல்வித்துறையில் பகுதிநேரமாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களையும் முழுநேர வேலையுடன் பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:தமிழகத்தில் 2020-21ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.34ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உடற்கல்வி, ஓவியம், கணினி உள்ளிட்ட 8 பாடங்களின் பகுதிநேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேரையும், ஊதிய உயர்வுடன் பணிநிரந்தரம் செய்வதற்கு இறுதி வடிவம் கொடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர். எனவே மனிதநேயத்துடன் பகுதிநேர ஆசிரியர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

ஊரக உள்ளாட்சி துறையில் தொகுப்பூதிய துப்புரவு பணியாளர்களை சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிநிரந்தரம் செய்து அரசாணை பிறப்பித்ததை போல, கல்வித்துறையில் ஆசிரியர்களையும் பணிநிரந்தரம் செய்யவேண்டும்.மேலும் 9 புதிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக அரசு உருவாக்குகிறது. இதற்கு புதிய கட்டிடம், இதர கட்டமைப்பு, புதிய பணியாளர்கள் என பல ஆயிரம் கோடிகளை செலவு செய்கிறது. தமிழக அரசு கூடுதலாக ஆண்டுக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கி பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தர அறிவிப்பினை கல்வி மானிய கோரிக்கைகளில் அறிவிக்க வேண்டும் என்றார்.

Tags : teachers ,
× RELATED சமூக இடைவெளி கடைப்பிடிக்காத...