×

கொரோனா பீதியால் மாகே பிராந்தியத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி, மார்ச் 12:     புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட மாகே பிராந்தியத்தில் கொரோனா பீதியால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் யுகான் பகுதியில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகத்தின் நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனால் உலகமே இந்த வைரசால் கலக்கம் அடைந்துள்ளது. கொரோனா தொற்றால் சீனாவில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் பல்வேறு நாடுகளில் இதனால் நோயாளிகள் இறந்து வருகின்றனர். இதனிடையே இந்தியாவுக்கும் இந்த நோய் பரவியுள்ளதால் நாட்டில் பரபரப்பான சூழல் நிலவியுள்ளது. குறிப்பாக ஐதராபாத், கேரளா உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் கொரோனா அறிகுறிகளுடன் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  1ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கம்போல் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் மாணவர்கள் தனி அறையில் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு யாரும் வரவேண்டாம் என அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. கேரளாவில் இவ்வாறு அசாதாரண சூழல் நிலவுவதால், கேரளாவை ஒட்டி அமைந்துள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட மாகே பிராந்தியத்தில் கொரோனா தடுப்புக்காக முன்ெனச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாகே அருகில் உள்ள கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் சுமார் 90 பேர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாகே மண்டல நிர்வாகியின் அறிவுறுத்தலை தொடர்ந்து அங்குள்ள பள்ளி, கல்லூரிகள், தனியார் கோச்சிங் நிறுவனங்கள், அங்கன்வாடிகள், மதரசாக்களை வரும் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.  கேரளாவில் அறிவிக்கப்பட்டதைப் போலவே 1ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரையிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாகேயில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என மண்டல நிர்வாகி அறிவித்துள்ளார். மாகேயில் இதுவரை யாரும் கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை. ஆனால் கேரளாவில் இருந்து மாகேக்கு கொரோனா பரவி விடுமோ என மக்கள் பீதியில் உள்ளனர்.

Tags : announcement ,colleges ,schools ,region ,Macau ,
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...