×

என்ஆர்எச்எம் ஊழியர்கள் 48 மணி நேரத்தில் போராட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் நடவடிக்கை

புதுச்சேரி, மார்க் 12:  புதுச்சேரி என்ஆர்எச்எம் ஊழியர்கள் 48 மணி நேரத்துக்குள் போராட்டத்தை திரும்ப பெறாவிட்டால் முன்னறிவிப்பு இன்றி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநரும், என்ஆர்எச்எம் இயக்குநருமான மோகன்குமார், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் என்ஆர்எச்எம் ஊழியர்களுக்கு அனுப்பிவுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி அரசு சுகாதாரத்துறையில் ேதசிய சுகாதார இயக்ககத்தின் பணியாளர்கள் கடந்த 2ம் தேதியிலிருந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சம வேலை, சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பணி நியமன ஆணை கொடுக்கும்போது, அவர்களுக்கான ஊதியம், போனஸ் உட்பட அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 14 பிரிவின் படியும், அரசு சட்ட விதிகளின் படியும்  என்ஆர்எச்எம்-இல் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தம் செய்ய முடியாது. அதேபோல், சம வேலை, சம ஊதியத்தையும் இவர்களுக்கு செயல்படுத்த முடியாது. ஏனென்றால் இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், போன்ஸ் விஷயமும் பிற மாநிலங்களில் கடைபிடிக்கும் முறைதான் இங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது.  தற்போது அரசு இயந்திரம் முழுமையாக கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இதில் சுகாதாரத்துறை ஊழியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் உடனடியாக தங்களது போராட்டத்தை 48 மணி நேரத்தில் திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் முன்னறிவிப்பு இன்றி போராட்டத்தில் ஈடுபடுவோர்  மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : NRHM ,strike ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து