×

களை கட்டியது வியாபாரம் வருடாந்திர மளிகை பொருட்கள் வாங்க குவியும் பொதுமக்கள்

சேலம், மார்ச் 12: வருடாந்திர மளிகைப்பொருட்கள் வாங்க பால்மார்க்கெட், லீபஜாரில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் வியாபாரம் களை கட்டியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வட மாநிலங்களில் விவசாயிகள் தானிய வகைகளும், மிளகாய், கொத்தமல்லி, பூண்டு, கசாகசா, பட்டை, லவங்கம், வெந்தயம், சோம்பு, கடுகு உள்ளிட்டவைகளை அறுவடை செய்து இந்தியா முழுவதும் அனுப்பி வருகின்றனர். இதேபோல், தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் பச்சைபயிர், உளுந்து, தட்டைபயிர், அவரைக்கொட்டை உள்ளிட்ட பயிர்களை சுத்தம் செய்து விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

சேலம் பால் மார்க்கெட், லீ பஜார், செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக புது மளிகைக்கடைகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக பால்மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகளில் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. பொதுமக்கள் புது மளிகைப்பொருட்களை வாங்கி மூட்டை, மூட்டையாக கட்டி சேலம் சத்திரம் ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று, அங்கிருந்து ரயில் மூலம் தங்கள் ஊருக்கு கொண்டு செல்கின்றனர். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக சத்திரம் ரயில்வே ஸ்டேஷன்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இது குறித்து ஆத்தூரில் இருந்து மளிகை பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் கூறியதாவது:  

ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் பால்மார்க்கெட், லீ பஜார், செவ்வாய்பேட்டைக்கு வந்து வருடாந்திர மளிகைப்பொருட்கள், புது அரிசியை வாங்கிச்செல்வோம். இதற்காக காலை 8 மணிக்கு ஆத்தூருக்கு வரும் விருத்தாசலம் ரயிலில் ஏறி சத்திரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவோம். காலை 10.30 மணி முதல் 12.30 மணிவரை மளிகைப்பொருட்களை வாங்கிக்கொண்டு, அதை மூட்டை, மூட்டையாக கட்டி பெங்களூர்- காரைக்கால் ரயில் வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு, சத்திரம் ரயில் நிலையத்திற்கு வந்துவிடுவோம். காரைக்கால் ரயிலில் ஏறி, 2.30 மணிக்குள் ஆத்தூருக்கு சென்றுவிடுவோம். கடந்த காலங்களில் பஸ்சில் தான் மளிகைப்பொருட்களை கொண்டு சென்றோம். கடந்த சில ஆண்டாக மளிகை மூட்டைகளை ஏற்ற பஸ்சில் தயக்கம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக ரயிலை பயன்படுத்தி வருகிறோம். காலை இயக்கப்படும் விருத்தாசலம் ரயில், மதியம் நேரத்தில் இயக்கப்படும் காரைக்கால் ரயில் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.  

Tags :
× RELATED டூவீலர் திருடியவர் கைது