×

கோடை வெயில் காரணமாக சாத்துக்குடி விலை கிலோ ₹70ஆக அதிகரிப்பு

சேலம், மார்ச் 12: கோடை வெயில் தாக்கம் காரணமாக சாத்துக்குடி விலை அதிகரித்து கிலோ ₹ 70 முதல் ₹100வரை  விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திராவில் பல இடங்களில் சாத்துக்குடி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் சாத்துக்குடி இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த சில மாதமாக சாத்துக்குடி விலை ஏறாமல் ஒரே மாதிரியாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோடை வெயில் தாக்கம் காரணமாக சாத்துக்குடி ஜூஸ் அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சாத்துக்குடி தேவையும் அதிகரித்த காரணத்தால், விலை கூடி வருகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் சாத்துக்குடியின் தேவை அதிகரிக்கும். மற்ற நாட்களில் மருத்துவமனை, பழச்சாறு கடைகளுக்கு தான் அதிகளவில் விற்பனை செல்லும். தற்போது கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ஜூஸ் வகைகளின் விற்பனை களை கட்டியுள்ளது. இதில் மற்ற ஜூஸ் வகைகளைவிட, சாத்துக்குடி ஜூஸ் விற்பனை அதிகளவில் நடந்து வருகிறது. சாலையோரம் தள்ளுவண்டி கடையில் சாத்துக்குடி ஜூஸ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு ஒரு சாத்துக்குடி ஜூஸ் ₹30 முதல் ₹40 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக சாத்துக்குடியின் தேவை அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி வரை ஒரு கிலோ சாத்துக்குடி ₹30 முதல் ₹50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக ₹70 முதல் ₹100 என விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
× RELATED டூவீலர் திருடியவர் கைது