×

தலைவாசலில் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்களை நிறுத்துவதால் விபத்து அபாயம்

ஆத்தூர், மார்ச் 12: தலைவாசலில் சர்வீஸ் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வராமல், தேசிய நெடுஞ்சாலையில் பஸ்களை நிறுத்தி செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. சேலம்- உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் தலைவாசல் அமைந்துள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட  கிராமங்களை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தலைவாசல் பேருந்து  நிலையத்திற்கு வந்து  செல்கின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், சிதம்பரம், திருவண்ணாமலை, வீரகனூர், திருச்சி, பெரம்பலூர்  உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், பேருந்து  நிலையத்திற்குள் வராமல், தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றிச்செல்கின்றன. இப்பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் பேருந்து நிறுத்தம் உள்ளது. ஆனால், சர்வீஸ் சாலைக்கு கூட பஸ்கள் வருவதில்லை.

இதனால் தேசிய நெடுஞ்சாலையோரம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். காலை மாலை நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் சாலையில் நிற்பதால் அவ்வழியாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், சாலையை கடப்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள்  கூறுகையில், ‘வெளியூர்களின் இருந்து வரும் பஸ்கள் நேரம் இல்லை என கூறி, பேருந்து நிலையத்திற்குள் வருவதில்லை. பெரும்பாலான பஸ்கள்  தேசிய நெடுஞ்சாலையிலேயே  நிறுத்தப்படுகிறது. இதுகுறித்து பல முறை  போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன், அரசு மற்றும் தனியார் பஸ்களை, தலைவாசல் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்லவும், சர்வீஸ் சாலை பேருந்து நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : National Highway ,
× RELATED கம்பம் புறவழிச் சாலைகளில் பழுதான...