×

கல்வித்துறை அலுவலர்களின் பணிச்சுமை குறைகிறது ராசிபுரத்தில் புதிய கல்வி மாவட்டம் விரைவில் உதயம்

நாமக்கல், மார்ச் 12:  ராசிபுரத்தில் புதிய கல்வி மாவட்டம் விரைவில் உதயமாகும் வாய்ப்பு உள்ளதால், கல்வித்துறை அலுவலர்களின் பணிச்சுமை குறையும் என்பதால் ஆசிரியர் சங்கங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் தற்போது நாமக்கல், திருச்செங்கோடு என இரண்டு கல்வி மாவட்டங்கள் செயல்பட்டு வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு பள்ளிகல்வித்துறை அலுவலகங்களை சீரமைப்பு உத்தரவுப்படி, நாமக்கல் மாவட்ட தொடக்கல்வி அலுவலகம் கலைக்கப்பட்டு திருச்செங்கோடு கல்வி மாவட்டம் ஏற்படுத்தப்பட்டது. தொடக்கல்வி அலுவலகத்தில் பணியாற்றிய அனைத்து அலுவலர்களும், அப்படியே திருச்செங்கோடு கல்வி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டனர். திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருச்செங்கோடு மாவட்ட கல்வி அலுவலகம் இயங்கி வருகிறது. நாமக்கல்லில் ஏற்கனவே இயங்கி வந்த மாவட்ட கல்வி அலுவலகம், நாமக்கல் கல்வி மாவட்ட அலுவலகமாக மாற்றப்பட்டது. இதற்கான அலுவலகம் நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

நாமக்கல் கல்வி மாவட்டத்தின் கட்டுப்பாட்டில், நாமக்கல், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், எருமப்பட்டி, புதுச்சத்திரம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள, அனைத்து வகையான மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்கப்பள்ளிகள் என 703 பள்ளிகளும், திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தின் கட்டுப்பாட்டில், திருச்செங்கோடு, வெண்ணந்தூர், மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், பள்ளிபாளையம், பரமத்தி, கபிலர்மலை ஆகிய 7 ஒன்றியங்களில் உள்ள 692 பள்ளிகளும் தற்போது இருக்கிறது. அதிகமான பள்ளிகள் இருப்பதால் இரண்டு மாவட்ட கல்வி அலுவலகத்திலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தது. பாடபுத்தகம் வினியோகம், அரசின் இலவச திட்டங்கள் குறித்த புள்ளி விபரங்கள் தயாரித்தல் போன்ற பணிகள் ஆண்டுதோறும் அதிகரித்தால், கல்வித்துறை அலுவலக பணியாளர்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர்.

இதனால், புதியதாக ராசிபுரத்தில் ஒரு கல்வி மாவட்டம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் மற்றும் இம்மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு ஆசிரியர் சங்கங்கள், கல்வித்துறை பணியாளர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில் தற்போது, 7 மாவட்டங்களில் புதிய கல்வி மாவட்டங்களை ஏற்படுத்த தமிழக அரசின் அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்துள்ளது. அதில் நாமக்கல் மாவட்டமும் ஒன்றாகும். புதிய கல்வி மாவட்டம் அமைப்பதற்கான கருத்துருவை அனுப்பி வைக்கும்படி, பள்ளிகல்வித்துறை நாமக்கல் மாவட்ட கல்வித்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, வரும் கல்வியாண்டில் ராசிபுரத்தை தலைமையிடாக கொண்டு புதிய கல்வி மாவட்டம் ஏற்படுத்த அதிக வாய்ப்பு இருக்கிறது. ராசிபுரத்தில் கல்வி மாவட்டம் அமையும் பட்சத்தில், ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 5 ஒன்றியங்களில் உள்ள அனைத்து வகை பள்ளிகள் இருக்கும் வகையில் மாற்றப்பட இருக்கிறது. புதிய கல்வி மாவட்டம் விரைவில் உருவாக உள்ளதால் ஆசிரியர் சங்கங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.

Tags : education officers ,district ,Rasipuram ,
× RELATED பள்ளிகளை ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட...