கடத்தூர் பகுதியில் தண்ணீரை விலைக்கு வாங்கி செடிகளுக்கு ஊற்றும் விவசாயிகள்

கடத்தூர், மார்ச் 12: கடத்தூர் பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் விலைக்கு தண்ணீர் வாங்கி பூ செடிகளுக்கு ஊற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. கடத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால், விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல விவசாயிகள் வேறு வேலை தேடி சென்று விட்டனர். ஒரு சிலர் மட்டுமே தற்போதும் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டில் இப்பகுதியில் சரியான மழை இல்லாததால், கோடைக்கு முன்னரே, கிணறுகள் முற்றிலும் வறண்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறைவான தண்ணீரை கொண்டு மாற்று பயிர்களான தட்டை பயறு, பூச்செடிகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். பயிர்களை காப்பாற்ற போதிய தண்ணீர் இல்லாத நிலையில், தண்ணீரை விலைக்கு வாங்கி, நத்தமேடு பகுதியை சேர்ந்த விவசாயிகள் பூச்செடிகளுக்கு பாய்ச்சும் நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘வறட்சியால் ஒரு மாதமாக தண்ணீர் இல்லாமல் மல்லிகை செடிகள் கருக தொடங்கியுள்ளன. எனவே, வாரம் ஒரு முறை ₹800 செலவிட்டு, ஒரு டிராக்டரில் தண்ணீர் வாங்கி செடிகளுக்கு விட்டு வருகிறோம். மல்லிகை பூ கிலோ ₹400க்கு தான் போகிறது. அதிக விலை கிடைக்காத நிலையிலும், செடிகளை காப்பாற்ற விலைக்கு தண்ணீரை வாங்கி பயிர்களுக்கு ஊற்றி வருகிறோம்,’ என்றார்.

Related Stories:

>