×

கான்சாபுரத்தில் புதிய தேவர் சிலை திறக்க அனுமதி கலெக்டருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை, மார்ச் 12: கான்சாபுரத்தில் சேதமடைந்ததை மாற்றி புதிய தேவர் சிலை திறக்க அனுமதிக்குமாறு கலெக்டருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கான்சாபுரத்தைச் சேர்ந்த ஆறுமுக சாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் ஊரில் கடந்த 1999ல் சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலை அமைக்கப்பட்டது. தொடர்ந்து பல ஆண்டுகளாக இருந்த நிலையில், சிலை சேதமடைந்தது. இதனால், சேதமடைந்த சிலையை மாற்றிவிட்டு புதிதாக வேறு சிலை வைக்க முடிவானது. இதற்கு அனுமதி கோரி கடந்த 31.3.2017ல் விருதுநகர் கலெக்டர் மற்றும் சிவகாசி ஆர்டிஓ ஆகியோரிடம் மனு அளித்தோம்.
கலெக்டரின் விசாரணையில் ஆஜராகி தேவையான விளக்கம் அளித்தோம். அவர்கள் விதித்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டது. தற்போது சிலை அமைக்கும் பகுதி முழுமையாக பாதுகாப்பாக வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை கலெக்டர் அனுமதி வழங்கவில்லை. எனவே, கான்சாபுரத்தில் தேவர் சிலை வைப்பதில் அதிகாரிகள் எந்தவித இடையூறும் செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் விசாரித்தார். மனுதாரர் வக்கீல் மகாலிங்கம் ஆஜராகி, தனியார் நிலத்தில் சிலை வைக்க அனுமதி தேவையில்லை என பல வழக்குகளில் ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. பொது கட்டிட பகுதியில் வைத்தால் மட்டுமே அனுமதி தேவை என்றார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஏற்கனவே வைக்கப்பட்ட சிலை சேதமடைந்ததால் தான், அந்த சிலையை மாற்றி புதிய சிலை வைக்க அனுமதி கோருகின்றனர். இந்த இடத்தில் சிலை வைக்க எந்த ஆட்சேபமும் இல்லை. எனவே, புதிய சிலை திறக்க கலெக்டர் அனுமதி தர வேண்டும். சட்டம் - ஒழுங்ைக பாதுகாத்திட தேவையான நிபந்தனைகள் விதிக்கலாம். மனுதாரர் தரப்பில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Icort Branch ,Collector ,Kansapuram ,Devara ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...