×

சேதமடைந்த வேளாண் அலுவலர் குடியிருப்பு பராமரிப்பு செய்ய கோரிக்கை

பரமக்குடி, மார்ச் 12: பரமக்குடியில் செயல்பட்டு வரும் வேளாண்மைத் துறை அலுவலர்களுக்கு கட்டப்பட்ட குடியிருப்பு வீடுகள் சேதம் அடைந்து பயன்பாடின்றி உள்ளது. இதனை பராமரிப்பு செய்து செயல்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடி ஒட்டப்பாலம் பகுதியில் வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலைய வளாகத்திற்குள் வேளாண்மை அலுவலகம் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த வளாகத்தில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், விதைப் பண்ணை, மண் பரிசோதனை நிலையம், தோட்டக்கலை உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வந்தது. தற்போது விதை பண்ணை நிலையம் மற்றும் மண் பரிசோதனை நிலையம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. வேளாண்மை துறை சார்ந்த மற்ற அலுவலகங்கள் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு குடியிருப்பு வீடுகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு, அடுக்குமாடி குடியிருப்புகளும், அதிகாரிகளுக்கு தனி வீடு என 25 வீடுகள் கட்டப்பட்டது.

குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருந்ததால், தொடக்கத்தில் அலுவலர்கள் குடியிருப்பு வீடுகளை பயன்படுத்தி வந்தனர். பின்னர் அதிகாரிகள் முறையான பராமரிப்பு செய்யாமல் விட்டு விட்டதால், வீடுகள் சேதம் அடைந்து காணப்பட்டது. இதனால் அலுவலர்கள் அலுவலக குடியிருப்பு வீடுகளை விட்டு விட்டு நகர்ப் பகுதிக்குள் வாடகைக்கு சென்று விட்டனர். தற்போது அனைத்து வீடுகளும் முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. வெளியூரிலிருந்து பரமக்குடி வேளாண்மை அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் அலுவலக குடியிருப்பு வீடுகளை பயன்படுத்த முடியாமல், ரூ.2 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை வீட்டு வாடகை கொடுத்து வெளியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
குடிநீர் மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் இருந்தும் அலுவலக குடியிருப்பு வீடுகளை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளதால் சமூக விரோதிகள் தவறான முறையில் பயன்படுத்தி வருகின்றனர். ஆகையால், மாவட்ட நிர்வாகம் பயன்பாடின்றி சேதமடைந்து காணப்படும். குடியிருப்பு வீடுகளை பராமரிப்பு செய்து அலுவலர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என வேளாண்மைத் துறை அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Officer Residential Care ,
× RELATED சேதமடைந்த வேளாண் அலுவலர் குடியிருப்பு பராமரிப்பு செய்ய கோரிக்கை