×

பரமக்குடி பகுதியில் அதிகரிக்கும் குடிநீர் நிறுவனத்தால் சரிந்து வரும் நிலத்தடி நீர்மட்டம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வேண்டுகோள்

பரமக்குடி, மார்ச் 12:  பரமக்குடி பகுதியில் அதிகரித்து வரும் குடிநீர் நிறுவனங்களால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பரமக்குடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்படும் வறட்சியின் பாதிப்பால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. சில கிராமங்களில் குளங்களில் மட்டுமே நீர்த்தேங்கி குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு தேங்கும் நீர் விரைவாக வற்றி விடுகிறது. இந்நிலையில் ராமநாதபுரம், பரமக்குடி, சாயல்குடி,கடலாடி, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் குடிநீர் நிறுவனங்களால் கிராம பகுதியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகின்றது.

இந்த நிறுவனங்களில் ராட்சத போர்வெல் மூலம் நாள்தோறும் பல லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு பாட்டில்களில் அடைத்து வணிக ரீதியாக விற்பனை செய்து வருகின்றனர். இந்த ராட்சத போர்வெல்களால் அருகில் உள்ள கிணறுகள், வீடுகளில் உள்ள போர்வெல்கள் மற்றும் அரசு சார்பில் போடப்பட்டுள்ள போர்வெல்களில் நிலத்தடி நீர்மட்டம் விரைவாக குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு சரிவர தண்ணீர் கிடைக்காமலும், விவசாயிகள் வயல்களில் நீர் பாய்ச்ச முடியாமலும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் குடிநீர் ஆலைகளில் வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகளால் மண் வளம் மற்றும் விவசாயிகள் நிலங்கள் பாதிக்கப்படுகிறது.

இதுகுறித்து விவசாயி கணபதி கூறுகையில், அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி தான் கிராமங்களில் இருக்கும் ஒரே குடிநீர் ஆதாரம். ஆனால் அதை சிதைக்கும் வண்ணம் அருகிலேயே தனியார் போர்வெல்கள் போடப்படுகின்றன. இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். மேலும் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்த கொள்ளளவு கொண்ட தொட்டி அமைக்கப்பட்டு மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் தனியார் ஆலைகள் மட்டும் அளவுக்கு அதிகமாக தினந்தோறும் குடிநீர் எடுப்பதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே சட்ட விரோதமாக தண்ணீரை உறிஞ்சும் தனியார் நிறுவனங்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags : area ,Paramakudi ,
× RELATED பட்டிவீரன்பட்டி பகுதியில் கொரோனாவால் குறைந்தது மா விலை: விவசாயிகள் கவலை