×

ஆர்.எஸ்.மங்கலம் அருகே பயனற்ற நிலையில் சுகாதார வளாகம் பொதுமக்கள் கடும் அவதி

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 12:  சனவேலி கிராமத்தில் பயன்பாடற்ற நிலையில் உள்ள சுகாதார வளாகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து சனவேலி கிராமத்தில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகம் சில வருடங்களாகவே பூட்டப்பட்டு பயன்பாடற்ற நிலையில் உள்ளது. ஏனென்றால் சனவேலி சுற்றுப்புறங்களில் உள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் வீட்டு தேவைகளுக்கு ஏதேனும் ஒரு பொருள்கள் வாங்க வேண்டும் என்றால் கூட இந்த ஊருக்கு தான் வர வேண்டிய அவசியம் உள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் வெளியூர்களில் இருந்து வரக்கூடிய பொதுமக்கள் மற்றும் இக்கிராமத்தில் கழிப்பறை வசதி இல்லாத வீட்டில் உள்ளவர்களும் அவசர காலத்திற்கு கழிவறை செல்வதற்கு மிகவும் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏனெனில் இருக்கக் கூடிய ஒரு சுகாதார வளாகம் சுமார் 2 ஆண்டாக பூட்டி வைத்துள்ளனர். இதற்கு ஏற்கனவே தண்ணீர் வசதி இல்லை என்ற காரணம் கூறி வந்த நிலையில், கடந்த ஆண்டு சுகாதார வளாகம் அருகே ஒரு ஆழ்குழாய் கிணறு அமைத்து அதன் மூலம் பள்ளி மற்றும் சுகாதார வளாகத்திற்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே போடப்பட்டது.

ஆனால் இன்றுவரை சுகாதார வளாகத்தை சரி செய்து அதற்காக உள்ள தொட்டியில் தண்ணீரை ஏற்றி சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் உள்ளது. சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் உடன் சுகாதார வளாகத்தை திறந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பயணி சாந்தி கூறுகையில், இந்த சுற்று வட்டாரத்தில் உள்ள எல்லா கிராம பொதுமக்களும் பொருட்கள் வாங்க மட்டுமின்றி வெளியூர்களுக்கு செல்வதாக இருந்தாலும் பஸ் ஏறுவதற்கு இங்கு தான் வர வேண்டும். எங்கள் கிராமத்தின் இணைப்பு சாலையில் உள்ள பஸ் ஸ்டாப்பில் ஒரு சில பஸ்கள் மட்டுமே நிற்க்கும். மற்ற பஸ்கள் எல்லாம் நிற்காமல் சென்று விடும். இதனால் பெரும்பாலும் நாங்கள் நடந்தே சனவேலிக்கு வந்து தான் பஸ் பிடித்து செல்கின்றோம். இப்படி இருக்கும் நிலையில் வெளியூரில் இருந்து வரும் நாங்கள் ஒரு அவசரத்திற்கு பாத்ரூம் போக வேண்டும் என்றால், இங்கு உள்ள சுகாதார வளாகம் பூட்டி கிடக்கிறது. இதனால் திறந்த வெளியில் தான் போக வேண்டிய சூழல் உள்ளது. எனவே உள்ளாட்சி நிர்வாகம் சுகாதார வளாகத்தை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றார்.

Tags : RS Mangalam ,
× RELATED திருப்பூரில் உள்ள முருகம்பாளையம்,...