×

இடத்தை அளவீடு செய்து தராததால் எய்ம்ஸ் சுற்றுச்சுவர் கட்டும் பணி தாமதம்

திருப்பரங்குன்றம், மார்ச் 12: தமிழக வருவாய்துறையினர் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தில் கூடுதலாக ஒதுக்கப்பட்ட 20 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்து கொடுக்காததால் சுற்றுச்சுவர் கட்டும் பணி தாமதமாவதாக புகார் எழுந்துள்ளது. மதுரை தோப்பூரில் சுமார் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக கடந்த 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று தொடங்கி வைத்தார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி இன்னும் ஒதுக்கீடு செய்யப்படாததால், மருத்துவமனை அமையுமா என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி கடந்த நவம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும் இப்பகுதியில் 6.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு 21.2கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரிவாக்கத்திற்காக மத்திய சுகாதாரத் துறையினர் தமிழக வருவாய் துறையிடம் கூடுதலாக 20 ஏக்கர் ஒதுக்கீடு செய்ய வேண்டுகோள் விடுத்தது. இதைத் தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூடுதலாக 20 ஏக்கர் நிலம் தர ஒப்புக் கொண்டனர். இந்த நிலையில் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 20 ஏக்கர் நிலம் தர ஒப்புதல் கொடுக்கப்பட்டு நான்கு மாத காலமாகியும் இதுவரை வருவாய் துறையினர் கூடுதல் இடத்தை அளவீடு செய்து ஒதுக்கி கொடுக்காததால், சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி 50 சதவீதம நிறைவடைந்த நிலையில் 20 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யாததால் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி மேலும் தாமதமாகும் என தெரிகிறது. எனவே, இந்த நிலத்தை விரைந்து அளவீடு செய்து எய்ம்ஸ் சுற்றுச்சுவர் பணியை துவக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : circuit ,AIIMS ,space ,
× RELATED மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் வழக்கு:...