×

பிரதான கால்வாய் தூர் வாரப்படவில்லை குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பரபரப்பு புகார்

திருமங்கலம், மார்ச் 12: திருமங்கலம் பிரதான கால்வாய் தூர் வாரப்படவில்லை என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மதுரை திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தனலட்சுமி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இது குறித்து தாலுகா விவசாயிகளுக்கு கூட்டம் குறித்த சரியான தகவல்கள் கிடைக்காததால் குறைந்தளவிலேயே குறைதீர்க்கும் கூட்டத்திற்கு விவசாயிகள் வந்திருந்தனர்.
இக்கூட்டத்தில் பேசிய விவசாயிகள்,`` கடந்த மூன்று மாதங்களுக்குமுன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் திருமங்கலம் பிரதான கால்வாயை தூர்வாரவேண்டும் என வலியுறுத்தி போராட்டம் அறிவிக்கப்பட்டது.

உடனே ஆர்டிஓ மற்றும் தாசில்தார் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஜனவரி முதல் கால்வாயில் தூரிவாரி கண்மாய்களுக்கு தண்ணீர்விட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தீர்கள். ஆனால், தற்போது அதிகாரிகள் கூறி மூன்று மாதங்களை கடந்தும் இன்னும் பிரதான கால்வாயில் தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை. இதனால் பிரதான கால்வாயில் தண்ணீர் வரவில்லை. திருமங்கலம் தாலுகாவில் உள்ள கண்மாய்களில் தண்ணீர் தேக்கமுடியவில்லை’’ என குற்றம் சாட்டினர். இதுகுறித்து பதில் அளித்த தாசில்தார் தனலட்சுமி இன்றைய கூட்டத்தில் பொதுப்பணித்துறை உள்ளிட்ட பிற துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை. அடுத்த மாதத்தில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து அதிகாரிகளையும் வரவழைத்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,`` தற்போது கோடை காலம் துவங்கியுள்ளது. பிரதான கண்மாயை தூர்வாரி கண்மாய்களில் தண்ணீரினை நிரப்பினால் மட்டுமே பொதுமக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்கமுடியும். விவசாயமும் செய்யமுடியும் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தனர்.

வாடிப்பட்டி
வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வழக்கம் போல் குறைவான விவசாயிகள் பங்கேற்றனர். ஆனால் அவர்களை விட குறைவான அளவில் அரசு அதிகாரிகள்பங்கேற்றனர். இதனால் விரக்தியடைந்த விவசாயிகள், ``அனைத்து துறை அதிகாரிகளும் கட்டாயம் கூட்டத்தில் பங்கேற்பார்கள்என்ற நம்பிக்கையில் தான் கூட்டத்திற்கு சிரமப்பட்டு வருகிறோம். ஆனால், மின்வாரியம் உள்ளிட்ட முக்கிய பல துறை அதிகாரிகள் வராதது வேதனையளிக்கிறது’’ என்`` இது தொடர்பாகமாவட்டஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று இனிவரும் கூட்டங்களில் அனைத்து துறை அதிகாரிகளும் முழுமையாக பங்கேற்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தாசில்தார் கிருஷ்ணகுமார் உறுதியளித்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், சாத்தியார் அணையினை தூர்வாரி முல்லைப் பெரியாற்றிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு சென்று அணையை நிரப்பி அப்பகுதிமக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்யய வேண்டும். சாணாம்பட்டி எட்டிகுளம் கண்மாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tags : Peasants ,canal ,
× RELATED கீழ்பவானியில் தண்ணீர் எடுத்த லாரி பறிமுதல்