×

நத்தத்தில் கொரோனா வதந்தியால் கோழிக்கறி விற்பனை சரிவு போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நத்தம், மார்ச் 12: நத்தத்தில் கொரோனா குறித்த வாட்ஸ்அப் வதந்தியால் கோழிக்கறி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் கவலையடைந்தனர். நத்தத்தில் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி பக்தர்கள் கடந்த பிப்.25ம் தேதி காப்புகட்டி விரதம் துவங்கினர். நேற்று முன்தினம் பூக்குழி திருவிழா நிறைவடைந்ததும் பக்தர்கள் விரதம் முடிந்தது. நேற்று பூப்பல்லக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி நத்தம் பகுதி மக்கள் வீடுகளில் சமைப்பதற்காகவும், விருந்தினர் உபசரிப்பிற்காகவும் அசைவ உணவு தயாரிப்பதற்கு ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன் போன்றவை வாங்க அலைமோதினர்.

இந்நிலையில் ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் நத்தம் பகுதியில் உள்ள ஒரு கோழி கடையில் வாங்கிய கறியை சாப்பிட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், அவர்கள் நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவை உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பரவ விடப்பட்டது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் பெரும்பாலானோர் கோழிக்கறி வாங்குவதை தவிர்த்தனர். இதனால் கோழிக்கறி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கோழிக்கடை வியாபாரி முகமது அப்பாஸ் என்பவர் கூறுகையில், ‘நாங்கள் கோழிக்கறி கடை வைத்து வாழ்ந்து வருகிறோம். நேற்று திருவிழா முடிந்ததும் கோழிக்கறி நன்கு விற்பனையாகும் என எதிர்பார்த்தோம். ஆனால் கொரோனா குறித்த வதந்தியை சமூகவலை தளங்களில் பரப்பி எங்களின் விற்பனையை பாதிக்க வைத்து விட்டனர். எனவே காவல்துறையினர் பொய்யான தகவல்களை வாட்ஸ்அப்பில் பரப்பும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Coroner ,collapse ,
× RELATED தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்த...