×

கொரோனா தாக்கத்தால் ரப்பர் விலை திடீர் சரிவு

நாகர்கோவில், மார்ச் 12: கொரோனா வைரஸ் தாக்கத்தால் குமரி மாவட்டத்தில் ரப்பர் விலை திடீர் சரிவை சந்தித்துள்ளது.குமரி மாவட்டத்தில் ரப்பர் மரங்களில் இலலையுதிர்காலம் தொடங்கியுள்ளது. இதனால் ரப்பர் பால்வெட்டு பணிகள் பல இடங்களில் நிறுத்தப்பட்டு வருகிறது.ஒரு சில இடங்களில் மட்டுமே பால்வெட்டு நடக்கிறது. இனி பருவ மழைக்காலம் தொடங்கிய பின்னரே ரப்பர் பால்வெட்டு முழுமையாக தொடங்கப்பட்டு உற்பத்தி ஆரம்பமாகும். இதனால் சந்தையில் ரப்பர் வரத்து குறைந்துள்ளது. சாதாரண விவசாயிகளிடம் ரப்பர் இருப்பு இருப்பதில்லை. ஒரு சிலரிடம் மட்டுமே ரப்பர் இருப்பு உள்ளது. இந்தியாவில் ரப்பர் இறக்குமதியும் இந்த ஆண்டு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 5 லட்சத்து 82 ஆயிரத்து 351 டன் ரப்பர் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இதில் 22 சதவீதம் ரப்பர் குறைவு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தநிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல வர்த்தகங்களும் முடங்கி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் ரப்பர் வர்த்தகத்தையும் கணிசமாக பாதிக்க தொடங்கியுள்ளது. வழக்கமாக விலையேற்றத்தை மட்டுமே சந்தித்து வந்த  மார்ச் மாதத்தில் ரப்பர் விலை கடந்த 10 நாட்களில் தொடர்ச்சியாக சரிந்து ₹4.50 குறைந்துள்ளது. ₹134.50க்கு மார்ச் முதல் வாரம் விற்பனை செய்யப்பட்டு வந்த ரப்பர் கடந்த 10ம் தேதி ₹130 ஆக சரிந்துள்ளது.இதற்கு கொரோனா வைரஸ் தாக்கமே காரணம் என்று ரப்பர் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றவர்கள் தெரிவிக்கின்றனர். உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படுகின்ற ரப்பரில் 40 சதவீதம் பயன்படுத்துவது சீனா ஆகும். அங்கு கொரோனா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதனால் வாகன சந்தையில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால் ரப்பர் தேவை குறைந்து விலை சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் சவுதி அரேபியா-ரஷ்யா இடையேயான வர்த்தக மோதல் கச்சா எண்ணெய் விலையை பாதிக்க தொடங்கியதும் ரப்பர் வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை ரப்பருக்கு முக்கிய பங்களிப்பை கச்சா எண்ணெய் வழங்குகிறது. கச்சா எண்ணெய் விலை குறைவது செயற்கை ரப்பரின் விலையையும் மேலும் குறைக்க செய்யும் என்பதாகும். இதுவும் இயற்கை ரப்பர் விலையை வீழ்ச்சியடைய செய்துள்ளது.

Tags :
× RELATED கொல்லங்கோடு அருகே ஓட்டலில் தோசை கேட்டவர் மீது தாக்குதல்