×

அனுமதியின்றி இயங்கினால் கடும் நடவடிக்கை குமரியில் மசாஜ் சென்டர்கள் கணக்கெடுப்பு தொடக்கம்

நாகர்கோவில், மார்ச் 12 : குமரியில் அனுமதியின்றி இயங்கும் மசாஜ் சென்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. நாத் எச்சரித்துள்ளார். குமரி மாவட்டத்தில் தற்போது ஏராளமான மசாஜ் சென்டர்கள் உருவாகி உள்ளன. ஆங்காங்கே உள்ள வாடகை கட்டிடங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளில் உருவாகி உள்ள சில மசாஜ் சென்டர்கள், முறையான அனுமதி இல்லாமல் தொடங்கப் படுகின்றன. புரோக்கர்கள் மற்றும் சமூக வலைதள விளம்பரங்கள் மூலம் இளைஞர்களை ஈர்க்கும் இந்த மசாஜ் சென்டர்களில், இளம்பெண்களை வைத்து விபசாரமும் நடத்துகிறார்கள். எந்த வித முன் அனுபவமும் இல்லாமல் மசாஜ் என்ற பெயரில் இளைஞர்களுக்கு ஆசையை தூண்டி, பின் அவற்றை வீடியோ பதிவு செய்து பணம் பறிக்கும் கும்பல்களும் உள்ளன.  இந்த மசாஜ் சென்டர்களின் பிடியில் தொழிலதிபர்கள், வி.ஐ.பி.க்கள், காவல்துறை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் சிலரும் உள்ளனர். கடந்த மாதம் நாகர்கோவில் டெரிக் சந்திப்பு பகுதியில் இயங்கி வந்த மசாஜ் சென்டரில் நடந்த சோதனையில் எந்த வித அனுமதியும் இல்லாமல் இளம்பெண்களை பணிக்கு வைத்து வாலிபர்களுடன் உல்லாசமாக இருக்க செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மசாஜ் சென்டரில் இருந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.  

 இதே போல் கடந்த இரு நாட்களுக்கு முன் கோட்டார் பகுதியிலும் அனுமதியின்றி இயங்கிய மசாஜ் சென்டரில் இருந்து இளம்பெண்கள் மீட்கப்பட்டு, அதை நடத்தி வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது போன்ற மசாஜ் சென்டர்களில் கல்லூரி மாணவர்களும் சிக்கி உள்ளனர். மசாஜ் சென்டர்கள் இயங்க பல்வேறு விதிமுறைகள் உள்ளன. பெண்கள் பணியாற்றும் மசாஜ் சென்டர்களுக்கு தனி விதிமுறை உள்ளது. முறையான படிப்பு முடித்துள்ள பிசியோதெரபிஸ்ட் தான் மசாஜ் சென்டர்களில் பணியில் இருக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும். ஆனால் இது போன்ற விதிமுறைகள் எதுவும் பின்பற்றாமல் சில மசாஜ் சென்டர்கள் இயங்குகின்றன. 20ல் இருந்து சுமார் 30 வயதுக்குட்பட்ட இளம்பெண்களை பணிக்கு அமர்த்தி பணம் சம்பாதிக்கிறார்கள். குமரி மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளிலும், விஐபிக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் இது போன்ற மசாஜ் சென்டர்கள் உருவாகி உள்ளன.  சாதாரணமாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தும் மசாஜ் சென்டர்கள் செயல்படுகின்றன.  இந்த நிலையில் தற்போது இது தொடர்பாக ஏராளமான புகார்கள்  வந்துள்ளதால், மசாஜ் சென்டர்களை கண்காணிக்க எஸ்.பி. நாத் உத்தரவிட்டு உள்ளார். முறையான அனுமதியின்றி இயங்கும் மசாஜ் சென்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் தற்போது இது தொடர்பான கணக்கெடுப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags : centers ,Kumari ,
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!