×

வாகன ஓட்டிகள் அவதி சம்பள உயர்வு பேச்சுவார்த்தை துவங்ககோரி போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

தஞ்சை, மார்ச் 11: சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்ககோரி தஞ்சை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.தஞ்சை கரந்தை புறநகர் கோட்ட அலுவலகம் முன் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தை ஏஐடியூசி மாநில செயலாளர் சந்திரகுமார் துவக்கி வைத்தார். ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தில்லைவனம், தலைவர் சேவையா, வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 14வது ஊதிய ஒப்பந்தம் பேசி கடந்த 1.9.2019ம் தேதி முதல் அடிப்படை சம்பள உயர்வு ஏற்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அரசு இன்னும் பேச்சுவார்த்தையை துவங்கவில்லை. உடனடியாக பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும். போக்குவரத்து கழக நிதி பற்றாக்குறைக்கு உரிய நிதியை தனியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.8 ஆயிரம் கோடியை எல்ஐசி உள்ளிட்ட பிரிவுகளுக்கு வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை அரசே பொறுப்பேற்று நடத்த வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 2019ம் ஆண்டு ஏப்ரல் முதல் பணப்பலன்கள் வழங்கப்படாமல் உள்ள நிலையில் அதை உடனடியாக வழங்க வேண்டும். பழைய, புதிய அகவிலைப்படி உயர்வு 53 மாதங்களாக ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கவில்லை. இதை உடனடியாக வழங்கி ஓய்வூதியத்துடன் இணைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டன.

ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன், எச்எம்எஸ் பொது செயலாளர் முருகேசன், டிஎம்எம்கே பேரவை செயலாளர் ராஜேந்திரன், போக்குவரத்து சங்க துணை பொது செயலாளர் சேகர், பொருளாளர் கஸ்தூரி, தலைவர் ராஜா, ஓய்வுபெற்றோர் சங்க தலைவர் மல்லி தியாகராஜன், பொருளாளர் பாலசுப்பிரமணியன், நிர்வாகிகள் மாணிக்கம், சுப்பிரமணியன், அழகிரி உட்பட பலர் பங்கேற்றனர்.கும்பகோணம்: கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்அனைத்து தொழிற்சங்கம் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. சிஐடியூ தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாநில சம்மேளன தலைவர் கண்ணன், பொது செயலாளர் மணிமாறன், கவுரவ தலைவர் மனோகரன், துணைத்தலைவர் தாமோதரன், ஏஐடியூசி கோபு, துணை பொது செயலாளர்கள் வைத்தியநாதன், கோவிந்தராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags : Motorists ,hike salary hike ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...