×

அக்னியாறு முகத்துவாரத்தில் மணல் திட்டுகள் கடலுக்குள் படகுகளை செலுத்த முடியாமல் மீனவர்கள் தவிப்பு

சேதுபாவாசத்திரம், மார்ச் 11: சேதுபாவாசத்திரம் அருகே அக்னியாறு முகத்துவாரத்தில் அடிக்கடி மணல் திட்டுகள் உருவாவதால் படகுகளை கடலுக்குள் செலுத்த முடியாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர். எனவே மணல் திட்டுகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே கொள்ளுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட அந்தோணியார்புரம், அம்பேத்கர் நகர் மற்றும் சின்ன ஆவுடையார் கோயில் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மீன்பிடி தொழிலை மட்டுமே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இந்த பகுதிகளில் இருந்து 80 பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அக்னியாற்றில் இருந்து வரும் நீரோட்டத்தின் காரணமாக அதிகளவில் மணல் தேங்கி கடலின் முகத்துவாரத்தை அடைத்து விடுவதால் திட்டுபோல் காட்சியளிக்கிறது. இதனால் படகுகளை கடலுக்குள் செலுத்தவும், கடலுக்குள் மீன் பிடிக்க சென்று விட்டு மீண்டும் கரை திரும்பும்போது துறைமுக வாய்க்காலுக்கு படகுகளை எடுத்து வருவதிலும் மீனவர்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் மிக குறைந்த நாட்களே அதாவது மாதத்துக்கு 10 நாட்களுக்கு மட்டுமே தொழில் செய்ய வேண்டிய நிலை உள்ளது. வாரத்துக்கு ஒருமுறை உடல் உழைப்போடு அதிகப்படியான தொகை செலவு செய்து மணல் திட்டுகளை மீனவர்களே அகற்றி வருகின்றனர். இதனால் மீன்பிடி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டு இவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீன் பிடிக்க செல்ல ஏதுவாக மணல் திட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Fishermen ,sand dunes ,Agniyaru ,
× RELATED படகு சேதம்: கடலில் 3 மீனவர்களை தேடும் பணி தீவிரம்