×

பாடாலூர் அருகே திறந்தவெளி பாராக மாறிய சாத்தனூர் குடிக்காடு பேருந்து நிறுத்தம்

பாடாலூர், மார்ச் 11: பாடாலூர் அருகே சாத்தனூர் குடிக்காடு பேருந்து நிறுத்தம் திறந்தவெளி மதுபான கூடமாக மாறி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே சாத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட குக்கிராமம் சாத்தனூர் குடிக்காடு. இந்த கிராமத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தை சுற்றுப்புற கிராம பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வெளியூர் செல்லும்போது பஸ்சுக்காக காத்திருக்கும்போது பயணிகள் வெயில் மற்றும் மழை காலங்களில் அமர்ந்து செல்லும் வகையில் உள்ளது. மேலும் வெளியூர்களில் படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் தினசரி பேருந்துக்காக இங்கு காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தை மாலை மற்றும் இரவு நேரங்களில் மது பிரியர்கள் ஆக்கிரமித்து திறந்தவெளி மதுபான கூடமாக பயன்படுத்தி வருகின்றனர். மாலை 7 மணி முதல் நள்ளிரவு வரை மது குடித்து விட்டு பாட்டில்களை உடைத்து போட்டு விடுகின்றனர்.  

இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அமரும்போது கண்ணாடி குத்தி காயம் ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது.  எனவே இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அச்சப்படுகின்றனர். மேலும் காலி மதுபாட்டில்கள், குப்பைகளால் பேருந்து நிறுத்தம் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. எனவே இந்த பேருந்து நிறுத்தத்தை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் சுத்தம் செய்ய வேண்டும். மேலும் பேருந்து நிறுத்தம் திறந்தவெளி மதுபான கூடாரமாக மாறி வருவதை தடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bus stand ,Pataloor ,space ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை