×

அரிமளம் அடுத்த கல்லூரில் செப்பனிட்ட சாலை ஒரு மாதத்தில் சேதம்

திருமயம், மார்ச் 11: அரிமளம் அருகே சாலை செப்பனிட்டு ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் சேதடைந்ததாக புகார் எழுந்துள்ளது. நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கல்லூர் கிராமத்தில் இருந்து சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் செல்லும் சாலை, பாலம் சேதமடைந்து காணப்பட்டது. இதனை சரி அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து கடந்தாண்டு பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் மூலம் ரூ.71 லட்சத்து 47 ஆயிரத்திற்கு சேதமடைந்த 2 பாலம், சுமார் 2400 மீட்டர் நீளமுள்ள சாலை செப்பணிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனிடையே சாலை பணிகள் அனைத்தும் முடிந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் சாலை பல இடங்களில் சேதமடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதுபற்றி கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் கூறியதாவது:கல்லூர்-பள்ளத்தூர் சாலையை அப்பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சென்று வருகின்றனர். இதனால் எங்கள் பகுதிக்கு முக்கிய சாலை என்பதால் தரமான சாலை வேண்டி அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கையை அடுத்து பல லட்டம் செலவு செய்து சாலை செப்பனிடப்பட்டது. இந்நிலையில் விடுமுறை நாளில் அதிகாரிகள் சம்பவ இடத்தில் இல்லாமல் சாலை பணிகள் நடந்த போது அதிகாரிகளின்றி சாலை பணிகள் நடக்க கூடாது என தடுத்தேன். அப்போது நாங்கள் தரமான சாலை போட்டு தருகிறோம் என வாக்குறுதி அளித்தனர். மேலும் சாலை பணிகள் முடிந்த நாளில் இருந்து 5 வருட பராமரிப்பையும் ஒப்பந்தகாரர் ஏற்றுக் கொண்டுள்ளதால் சாலை தரமானதாக இருக்கும் என நம்பினேன். ஆனால் சாலை பணிகள் முடிந்த ஒருசில மாதங்களில் சாலையில் வெடிப்பு ஏற்பட்டு பள்ளம் உருவாக ஆரம்பித்தது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இது பற்றி முறையிட்ட போது முறையான பதில்கள் தராத நிலையில் பழுதடைந்த சாலையை பராமரிக்க இது வரை நடவடிக்கை இல்லை. அரசு பணத்தைதான் விரயமாக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பல லட்சம் செலவு செய்து செப்பனிடப்பட்ட கல்லூர்-பள்ளத்தூர் சாலையை சரி செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சாலை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது என்றார்.

Tags : road ,Arimalam ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...