×

உப்பனாற்றின் வழியாக கடல்நீர் உட்புகுவதால் 25 கிராமங்கள் பாதிப்பு

சீர்காழி,மார்ச் 11: உப்பனாற்றின் வழியாக கடநீர் உட்புகுவதால் 25 கிராமங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே தடுப்பணை கட்ட சட்டமன்ற கூட்டத்தில் நிதி ஒதுக்க வேண்டும் என்று காவிரிப்படுகை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இமயவரம்பன் கோரிக்கை விடுத்துள்ளார்.நாகை மாவட்டம் சீர்காழி அருகே தேனூர் புது மண்ணியாற்றிலிருந்து உப்பனாறு பிரிந்து தேனூர் ஆதமங்கலம் ஆலஞ்சேரி மருதங்குடி புங்கனூர் பனமங்கலம் துறையூர் சட்டநாதபுரம் காரைமேடு புதுதுறை திருநகரி வழியாக சென்று திருமுல்லைவாசல் கடலில் கலந்து வருகிறது. இந்த ஆற்றில் வரும் தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் சுமார் 12 ஆயிரம் ஏக்கரில் நடவு பணிகளை செய்து வந்தனர்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமுல்லைவாசல் கடல் முகத்துவாரம் பகுதியிருந்து கடல் நீர் உட்புகுந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்றதால் சீர்காழி தென் பாதி, சட்டநாதபுரம் பனமங்கலம், காரைமேடு, துறையூர், ஆலஞ்சேரி, ஆதமங்கலம், தேனூர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து பல போராட்டங்களை நடத்தினர். ஆனால் இதுநாள்வரை தடுப்பணை கட்டுவதற்கான பணிகள் துவங்கவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.இந்த நிலையில் பனமங்கலம் விவசாயிகள். கடல் நீர் உட்புகாமல் தடுக்க தடுப்பணை அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து காவிரிப்படுகை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இமயவரம்பன் கூறுகையில்,
திருமுல்லைவாசல் கடல் முகத்துவார பகுதியிலிருந்து கடல் நீர் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு உட்புகுவதனால் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் எந்த அரசும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

நானும் ஒரு விவசாயி என கூறும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளின் நலன் கருதி நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே திருமுல்லைவாசல் கடல் பகுதியிலிருந்து உப்பு நீர் உட்புகாத வகையில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் அப்படி நிதி ஒதுக்கீடு செய்தால் விவசாயிகள் காலம் உள்ளவரை நன்றி மறவாதவர்களாக இருப்பார்கள் என்றார்.

Tags : villages ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் 636 வருவாய்...