×

காரைக்காலில் தேசிய பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணி துணை கலெக்டர் துவங்கி வைத்தார்

காரைக்கால், மார்ச் 11: காரைக்காலில் தேசிய பாதுகாப்பு தினத்தையொட்டி, தற்காப்பு பாதுகாப்பு சாதனங்கள் குறித்த விழிப்புணர்வு அலங்கார ஊர்தியை, மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் கொடியசைத்து துவங்கி வைத்தார்.தேசிய பாதுகாப்பு குழுமம் 4-3-1966 ம் ஆண்டு நிறுவப்பட்டது. தொடர்ந்து, 4-3-1972 முதல் தேசிய பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. புதுச்சேரி தொழிலாளர் துறை சார்பில், நடப்பு ஆண்டு 49வது தேசிய பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தொழிற்சாலைகளில் தற்காப்பு பாதுகாப்பு சாதனங்கள் குறித்த விழிப்புணர்வு அலங்கார ஊர்தியை, மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த தேசிய பாதுகாப்பு தினத்தின் நோக்கமானது, தொழிற்சாலையில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைப்பதாகும். அதன்படி இந்த குழுமமானது ஒவ்வொரு தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் அதன் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வை கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுத்தி வருகிறது.ஒவ்வொரு தொழிற்சாலையும் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகளில் தொழிலாளர்களின் பங்களிப்பை ஊக்குவித்து வருகிறது இந்த குழுமத்தின் தொலை நோக்கு பார்வையாக தொழிற்சாலைகளில் நடக்கும் பெரும் விபத்துகளை மட்டுமின்றி சிறுகாயங்கள் கூட இல்லாமல், பணிபுரியும் இடம் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

எந்த ஒரு தொழிற்சாலை பாதுகாப்பு செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறதோ, அங்கு உற்பத்தி திறனும் அதிகரிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தேசிய பாதுகாப்பு குழுமமானது, 2020 ஆண்டிற்கான தலைப்பாக, ‘மேம்பட்ட தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் பாதுகாப்பு மற்றும் சுகாதார செயல் திறனை மேம்படுத்த முடியும்’ என்பதை நிரூபிக்கும் வகையில், தொழிற்சாலைகளில் தற்காப்பு பாதுகாப்பு சாதனங்கள் குறித்த விழிப்புணர்வு அலங்கார ஊர்தியை, மாவட்டம் முழுவதும் நடத்த முடிவு செய்தது. இந்த அலங்கார ஊதியின் தொடக்க நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் அலுவலக வாயிலில் நடைபெற்றது.அலங்கார ஊர்தியை மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை கலெக்டர் பாஸ்கரன். தொழிற்சாலை ஆய்வாளர் செந்தில்வேலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அலங்கார ஊர்தி, மாவட்டத்தின் அனைத்து பகுதிக்கும் சென்றது.

Tags : Deputy Collector ,National Security Day Awareness Rally ,Karaikal ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...