×

விவசாயி அசத்தல் கொரோனா வைரஸ் அச்சம் நாகையில் கோழி விலை வீழ்ச்சி ஒரு கிலோ ரூ.90க்கு விற்பனை

நாகை,மார்ச்11: கொரோனோ வைரஸ் அச்சத்தின் எதிரொலியாக நாகையில் சிக்கன் விலை குறைந்ததால் கோழிக்கடை விற்பனையாளர்களுக்கு பல லட்ச ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ ரூ.90க்கு விற்பனையானது.நாடுமுழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வந்த கொரோனோ வைரஸ் தற்போது தமிழகத்திலும் ஏற்பட தொடங்கி உள்ளது. இதனால் நிம்மதி பெருமூச்சுவிட்ட பொதுமக்கள் தற்பொழுது அச்சத்தில் உறைந்துள்ளனர். குறிப்பாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பதிவுகளின் உண்மை தன்மைகளை அறியாமல் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனோ பாதிப்பு ஏற்படுகிறது என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிவருகிறது. இதன் விளைவாக நாகையில் பல்வேறு பகுதிகளில் கோழிக்கறியின் விலை மிகக்கடுமையாக சரிந்துள்ளது.

நாகை, நாகூர், திட்டச்சேரி, திருமருகல், சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோழிக்கறியின் விலை குறைந்ததால் கடை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒருகிலோ ரூ.220 முதல் ரூ. 240 வரை விற்பனையான சிக்கன் தற்போது ஒரு கிலோ ரூ. 90 மற்றும் ரூ.100 மட்டுமே விற்பனை ஆகிறது. விலை குறைவாக விற்றாலும் கொரோனோ அச்சம் காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் வாங்க வருவதில்லை. இதனால் கடந்த 10 நாட்களாக பல லட்சம் ரூபாய் வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிக்கன் விற்பனையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு கூட ஊதியம் கொடுக்க முடியாதை நிலை ஏற்பட்டுள்ளது- என்று கூறுகின்றனர். இது போன்ற வீண் வதந்தீகளை தடுக்க அரசு முறையான அறிக்கைவிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். இந்த பீதியின் காரணமாக நாகை மற்றும் நாகூரில் உள்ள மார்கெட்டுகளில் காய்கறி வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

Tags : Naga ,
× RELATED பைக் திருடும் மர்ம ஆசாமி வீடியோ வைரல் ஆரணியில் நள்ளிரவில்