×

பருத்தி சாகுபடியை காப்பீடு செய்ய வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைக்கால், மார்ச்.11: பருத்தி சாகுபடியை காப்பீடு செய்ய, வேளாண் துறை தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என, புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.காரைக்கால் பஜன்கோவ அரசு வேளாண் கல்லூரியில், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் விதை திட்டம் இணைந்து விதை தின விழாவை நடத்தியது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவை, புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்து பேசியது: விவசாயிகள், வேளாண் அதிகாரிகள், விஞ்ஞானிகள் ஆகியோர் எப்போதும் இணக்கமாக இருக்க வேண்டும். விவசாயிகளுக்கு அனுபவம் இருக்கலாம், ஆனால் அதிகாரிகள், விஞ்ஞானிகள் புதுப்புது தொழில்நுட்பம், அடுத்தடுத்த நகர்வுகளுக்கு கொண்டு செல்ல உதவும். மாற்றம் ஏற்பட்டுவரும் உலகளாவிய சூழலில், வேளாண் பேராசிரியர்கள், விவசாயிகள் மாணவர்கள் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.

உலகம் முழுவதும் ஏற்படும் வெப்பமய பாதிப்புகள் குறித்து தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதனை விவசாயிகள் புரிந்துகொண்டு, மண் நலன் மீது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். குறைந்த அளவிலான நீரை பயன்படுத்தி அதிக மகச்சூழ் பெற முன்வரவேண்டும். முக்கியமாக, இயற்கை முறையில் நஞ்சற்ற உணவுப் பொருள்கள் உற்பத்தியை பொதுமக்களுக்கு வழங்கவேண்டும்.காரைக்கால்மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த 4 மாதங்களுக்கு முன்பே நெல் கொள்முதலுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அந்த முயற்சியை சிலர் திட்டமிட்டு தடுத்து வேடிக்கை பார்த்தனர். இருந்தும், முதல் அமைச்சரின் விடாமுயற்சியால் எப்.சி.ஐ மூலம் நெல் கொள்முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அடுத்தப்படியாக, சாகுபடிக்கு பிந்தைய மானியம் தருவதற்கு முதல் அமைச்சர் ஒப்புதல் அளித்த கோப்பு தலைமைச்செயலரிடம் உள்ளது. ஓரிரு வாரத்தில் அந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். அதைத்தொடர்ந்து பருத்தி சாகுபடியை காப்பீடு செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்க வேளாண் துறைக்கு அறிவுறுத்தியுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.விழாவில், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த புதியரக நெல் விதைகள், காய்கறிகளை அமைச்சர் பார்வையிட்டு அதன் பயன்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். விழாவில், வேளாண் கல்லூரி முதல்வர் கந்தசாமி, பேராசிரியர் பாண்டியன், மற்றும் காரைக்கால், புதுச்சேரியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Tags : Department of Agriculture ,
× RELATED ஆதார், வங்கிக்கணக்கு விவரங்களை...