×

கன்னியாகுமரி கடற்கரையில் கேரள போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை

லாட்ஜில் உயிருக்கு போராடிய கள்ளக்காதலிக்கு தீவிர சிகிக்சை

கன்னியாகுமரி, மார்ச் 11: கன்னியாகுமரிக்கு   கள்ளக்காதலியுடன் வந்த கொல்லம் போலீஸ்காரர் வாவத்துறை கடற்கரையில் விஷம்   குடித்து தற்கொலை செய்து கொண்டார். லாட்ஜ் அறையில் விஷம் குடித்த நிலையில்   கிடந்த அவரது கள்ளக்காதலி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில்   அனுமதிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி வாவத்துறை கடற்கரையில் நேற்று   அதிகாலை சுமார் 5.30 மணிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கான பணிகளில்   ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கடற்கரை பகுதியில் சுமார் 42 வயது   மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக கிடந்தார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள்   உடனடியாக கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
  சப் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு  விரைந்து சென்று விசாரித்தனர்.  தொடர்ந்து அவரது உடலை மீட்டனர். அவர்  அணிந்திருந்த சட்ைட பையில் ஒரு  செல்போனும், கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட  காவல்துறை, போஸ்(42) என்ற பெயரில்  வழங்கிய அடையாள அட்டையும் இருந்தது.  அவற்றை கைப்பற்றிய போலீசார் உடலை  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து  அந்த செல்போன்  எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது  கன்னியாகுமரியில்  உள்ள ஒரு பிரபல லாட்ஜில் அறை எடுத்து இளம் பெண்  ஒருவருடன் தங்கி இருந்தது  தெரியவந்தது. அதன்படி போலீசார் சம்பந்தப்பட்ட  லாட்ஜ்க்கு விரைந்து சென்று  விசாரித்தனர். பின்னர் அவர் தங்கி இருந்த அறையை  திறந்து பார்த்தனர். அப்போது  அறைக்குள் இளம்பெண் ஒருவர் விஷம்  குடித்து மயங்கிய நிலையில் உயிருக்கு  போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்து  அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை  மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது.  தொடர்ந்து 2 பேர் குறித்தும் போலீசார் தீவிர  விசாரணை நடத்தினர். விசாரணையில்  திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.  கடற்கரையில் இறந்து கிடந்தவர் கேரள  மாநிலம் கொல்லம் காவல்துறையில்  டிரைவராக பணியாற்றும் போஸ்(42) என்பதும், அவருடன் இருந்த பெண் அதே  பகுதியை சேர்ந்த சுப்ரியா(30) என்பதும் தெரிய வந்தது.  கள்ளக்காதல் ஜோடியான இவர்கள் கடந்த 6ம்  தேதி  கன்னியாகுமரிக்கு  வந்துள்ளனர். இங்கு ஒரு பிரபல லாட்ஜில் போலீஸ் என கூறி சொகுசு அறை  எடுத்து  தங்கி இருக்கின்றனர்.

பின்னர் இங்குள்ள  சுற்றுலாத்தலங்களுக்கு  சென்று வந்துள்ளனர். பகல் முழுவதும்  பல்வேறு இடங்களுக்கு  செல்லும் இவர்கள் இரவு தங்குவதற்காக அறைக்கு வருவது  வழக்கமாம். இந்நிலையில் நேற்று காலை  போஸ் கடற்கரையில் இறந்து கிடந்துள்ளார். சுப்ரியா  அறையில் விஷம் குடித்த  நிலையில் மயங்கி கிடந்தார். இவர்கள் இந்த முடிவை  எடுப்பதற்கு என்ன காரணம்?  என்பது உடனடியாக தெரியவில்லை. இது  தொடர்பாக கன்னியாகுமரி  போலீசார் கேரளாவில் உள்ள 2 பேரின் உறவினர்களுக்கும்,  கொல்லம் காவல்  நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். இதில் போஸ் திருமணமானவர் என்றும்,  அவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருப்பதும், சுப்ரியா திருமணமாகி  விவகாரத்து பெற்றவர் என்ற தகவலும் கிடைத்துள்ளது. உறவினர்கள் கன்னியாகுமரி வந்த பிறகே   தற்கொலைக்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் கூறினர்.

மாயமானதாக புகார்
போஸ் மாயமானதாக சேர்த்தலா காவல் நிலையத்திலும், சுப்ரியா மாயமானதாக  மன்னம்தலா காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி  போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். எனவே அவர்கள் குறித்து அந்தந்த காவல்  நிலையத்துக்கும் கன்னியாகுமரி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : policeman ,Kerala ,suicide ,
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு