×

எல்லாபுரம் அருகே வண்ணாங்குப்பத்தில் உச்சி வெயிலில் அமர்ந்து படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்

ஊத்துக்கோட்டை, மார்ச் 11: ஊத்துக்கோட்டை அருகே வண்ணாங்குப்பம் கிராமத்தில்  உள்ள தொடக்கப்பள்ளிக்கு போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவ, மாணவியர்கள் வெயிலில் அமர்ந்து படிக்கின்றனர். கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தரவேண்டும் என பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம் பெரிய வண்ணாங்குப்பம் கிராமத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு  தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 50க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள். 2 ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்.இங்கு போதிய வகுப்பறை இல்லாததால் பள்ளியின் வெளியே உச்சி வெயிலில்  மாணவ - மாணவிகளை அமரவைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். இதனால், வெயில் காலத்தில் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். மழைக்காலத்தில் இட நெருக்கடியால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

 ஏற்கனவே பள்ளி வளாகத்தில் இருந்த பழைய வகுப்பறை பழுதடைந்து இருந்ததால் அதை அகற்றி விட்டனர். அதற்கு பதில் புதிதாக வகுப்பறை கட்டவில்லை.
இப்பள்ளியை சுற்றியிருந்த சுற்றுச்சுவர் கடந்த 3 வருடத்திற்கு முன்பு  இடிந்து விழுந்து விட்டது. அதன்பிறகு சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. பள்ளியை சுற்றி முள்வேலி போட்டுள்ளனர். மாணவர்கள் விளையாடும்போது முள்வேலியில் விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே அரசு  தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறையும், காம்பவுண்டு சுவரும் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்.இது குறித்து அப்பகுதி பெற்றோர்கள் கூறியதாவது :வண்ணாங்குப்பம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 50 மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள். ஒரு வகுப்பறையில் 20 பேர் மட்டுமே அமர்ந்து படிக்க முடிகிறது. மீதமுள்ளவர்கள் இடம் பற்றாக்குறையால் பள்ளியின் வெளியில் அமர்ந்து படிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே கூடுதலாக பள்ளி வகுப்பறையும், காம்பவுண்டு சுவற்றையும் கட்டி தர கல்வித்துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Government school students ,Ellapuram ,Varanguppam ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்-லைன்...