×

மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் பைக் பார்க்கிங் மையமாக மாறிய பயணிகள் நிழற்குடை

மாமல்லபுரம், மார்ச் 11: மாமல்லபுரம் பேரூராட்சி பூஞ்சேரியில் உள்ள பஸ் பயணிகள் நிழற்குடை, பைக்குகள் நிறுத்தும் பார்க்கிங் மையமாக மாறிவிட்டது. இதனை மீட்டு, அகற்றி புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.மாமல்லபுரம் பேரூராட்சி பூஞ்சேரி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பயணிகள் நிழற்குடை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டது. ஆனால், இதனை முறையாக பராமரிக்கவில்லை. இதனால், நிழற்குடையில் பல பகுதிகள் விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன.இதனால், இடிந்து விழும் நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடை உள்ள பகுதிக்கு செல்ல பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும், பஸ் வரும் வரை மழை, வெயில் எதுவானாலும் சாலையிலேயே நிற்கும் நிலை உள்ளது.

இதற்கிடையில், நிழற்குடையை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட சிலர், பாழடைந்து கிடக்கும் பயணிகள் நிழற்குடையை, பைக்குகள் நிறுத்தும் பார்க்கிங் மையமாக மாற்றிவிட்டனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக பயனில்லாமல் பாழடைந்து இருக்கும் நிழற்குடையை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாமல்லபுரம் பேரூராட்சி பூஞ்சேரியில் கடந்த 20 ஆண்டுக்கு முன் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இதனை முறையாக பராமரிக்காமல் விட்டதால் பாழடைந்து ஒரு காட்சி பொருளாக காணக்கடுகிறது. வீணாக கிடக்கும் இந்த நிழற்குடையை முற்றிலும் அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என்றனர்.

Tags : Travelers ,Poonjary ,Mamallapuram ,
× RELATED மாமல்லபுரத்தில் பரபரப்பு சிற்ப கல்லூரி வளாகத்தில் தீ